Advertisment

ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது  அமைச்சருக்குத் தெரியாதா? - அன்புமணி கேள்வி

 Anbumani question Does minister not know how to send teachers custodian duty

ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்புவது குறித்து அமைச்சருக்குத் தெரியாதா? முடிவெடுத்தது யார்? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக பள்ளிக்கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்திருப்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே தெரியவில்லை என்பது கவலையளிக்கும் உண்மையாகும்.

Advertisment

பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனர் அண்மையில் அத்துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி நேற்று அறிக்கை வெளியிட்ட நான், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஊதிய செலவை மிச்சப்படுத்தும் நோக்குடன், 497 ஆசிரியர்களை விடுதிக்காப்பாளர் பணி செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு விற்கப்போகிறார்களா? என்று வினா எழுப்பி கண்டித்திருந்தேன்.

அடுத்த சிறிது நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் இது குறித்து கேட்ட போது,’’ இது பற்றி எனக்குத் தெரியாது. இது பி.சி துறையில் வருகிறதா, எங்கள் துறையில் வருகிறதா? எனத் தெரியவில்லை. விசாரித்து விட்டு சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ஆசிரியர்கள் விற்பனை தொடர்பான பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனரின் சுற்றறிக்கை கடந்த 7-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின் ஒரு வாரமாகியும் இது குறித்து அமைச்சருக்கே எதுவும் தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பும் முடிவை கண்டிப்பாக அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது. இது தொடர்பான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரின் கடிதம் பள்ளிக்கல்வித்துறைக்கு செப்டம்பர் 23-ஆம் நாள் அனுப்பப் பட்டுள்ளது. அதன்பின் 44 நாட்கள் கழித்து தான் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இடைப்பட்ட ஒன்றரை மாதத்தில் பள்ளிக்கல்வித் துறையில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இது இரு துறைகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நிலையில் விவாதித்து கொள்கை முடிவு எடுக்கப்படாமல், ஆசிரியர்களை இன்னொரு துறைக்கு அனுப்புவது சாத்தியமில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாமல், ஆசிரியர்களை விடுதி காப்பாளர் பணிக்கு அனுப்புவதற்கான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் அனுப்புகிறார் என்றால். அந்த முடிவை எடுத்தவர் யார்? இந்த வினாவுக்கான விடையை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. அதை தெரிந்து கொள்ள வேண்டியது மக்களின் உரிமை.

எனவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும். விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவை கைவிட வேண்டும். பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்துவதை ஏற்று பள்ளிக்கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe