Skip to main content

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிப்பதா? - அன்புமணி

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

Anbumani question Depriving one lakh students of their educational opportunities

பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, மாநிலப் பாடத்திட்டப்  பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும்  10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில்  ஒதுக்கீடு செய்யப்படும் 25%  இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடவில்லை. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

2009-ஆம் ஆண்டின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும்  25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.  அவற்றில்  மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு,  ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மாணவர் சேர்க்கை முடிக்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் இந்த அட்டவணைப்படி தான் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டில்  மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கைக் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை. இதை கடந்த மே 3-ஆம் தேதியே சுட்டிக்காட்டிய பாட்டாளி மக்கள் கட்சி, உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை  வெளியிட்டு, பணிகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், அதன் பின் 20  நாட்களாகியும்  அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசு உறங்கிக் கொண்டிருக்க்கிறது.

கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்தத் தொகை தனியார் பள்ளிகளுக்கு செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு  வழங்கப்பட வேண்டிய  ரூ. 2151 கோடியை  மத்திய அரசு வழங்காதது தான் இதற்கு காரணம் என்றும்,  மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்குமா, கிடைக்காதா? என்ற ஐயம் காரணமாகவே நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடுவதில்  தமிழக அரசு  தாமதம் செய்வதாகத் தெரிகிறது.

கல்வி உரிமைச் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பதற்காகக் கூறப்படும் எந்தக் காரணத்தையும் ஏற்க முடியாது. ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை மத்திய அரசிடமிருந்து  பெற முடியாதது திமுக அரசின் தோல்வியாகும்.  மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி கடந்த ஆண்டே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், 10 மாதங்களாக  இந்த விவகாரத்தின் வீண் அரசியல் செய்து கொண்டிருந்த தமிழக அரசு இப்போது தான் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தமிழக அரசு அடைந்த தோல்விக்காக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தண்டிக்கப்படக் கூடாது.  மத்திய அரசின் நிதி தொடர்பான சர்ச்சை எழுந்த போது, எந்த கல்விப் பணியும் பாதிக்கப்படாது;  அனைத்து பணிகளும் மாநில அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அப்போது அப்படி கூறி விட்டு இப்போது மாணவர் சேர்க்கையை தொடங்க மறுப்பது நியாயமல்ல.

கல்வி உரிமைச் சட்டப்படி சுமார் ஒரு லட்சம் ஏழை மாணவர்களை தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்க வைக்க முடியும்.  திமுக அரசு அதன் தவறு மற்றும் அலட்சியம் காரணமாக  ஒரு லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடக் கூடாது. பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அதற்கான  அறிவிக்கையை  தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு, மாணவர்களைச் சேர்க்க   நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்