Anbumani insists Rs 1000 crore TASMAC scam should be senthil balaji dismissed

Advertisment

டாஸ்மாக் ஊழலில் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், மூலக் குற்றச் சாட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுப்பது மட்டுமின்றி, அதிலும் ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சொத்துகளைக் குவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த 6 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘‘எஸ்.என்.ஜே, கால்ஸ், அக்கார்டு, சஃபில், ஷிவா டிஸ்டில்லரீஸ் ஆகிய மது ஆலைகளும், தேவி பாட்டில்ஸ், கிரிஸ்டல் பாட்டில்ஸ், ஜி.எல்.ஆர் ஹோல்டிங்ஸ் ஆகிய பாட்டில் நிறுவனங்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து ரூ.1000 கோடி கணக்கில் வராத பணத்தை ஒதுக்கியுள்ளன. டாஸ்மாக் நிறுவனத்திடம் கூடுதலாக மது வழங்கும் ஆணை பெறுவதற்காக கையூட்டு வழங்க இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களை பணியிடமாற்றம் செய்ய கையூட்டு வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

Advertisment

இவை அனைத்தும் 1988 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி குற்றம் என்றும், இதன் மூலம் கிடைத்த பயன்கள் 2002ஆம் ஆண்டின் கருப்புப்பண மாற்றத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ள இந்த தகவல்கள் எதுவும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. திமுக ஆட்சியில் இத்தகைய ஊழல்கள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை தான். இன்னும் கேட்டால் இதை விட பல நூறு மடங்கு ஊழல்களும், முறைகேடுகளும் இத்துறையில் நடந்திருக்கின்றன. அவையெல்லாம் அடுத்தடுத்து நடைபெறவுள்ள விசாரணையில் தெரியவரக்கூடும்.

அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இணைய இதழில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி இரு நாட்களுக்கு முன் நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் அரசு விளக்கமளிக்க வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்ற வழக்கமான பல்லவியை பாடிவிட்டு, இந்த விவகாரத்தை திமுக அரசு கடந்து சென்று விட முடியாது. அமலாக்கத்துறையால் கண்டறியப்பட்டுள்ள விவகாரங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களால் ஏற்கனவே அறியப்பட்டவை தான். மதுக்கடைகளில் மதுப்புட்டிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை பலமுறை அமைச்சர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பார் ஒதுக்கீட்டு ஊழல், பணியிட மாற்ற ஊழல் போன்றவை இதுவரை வெறும் குற்றச்சாட்டுகளாக இருந்த நிலையில், இப்போது அவற்றுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆகவே, இந்த முறைகேடுகள் அனைத்துக்கும் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

Advertisment

அமலாக்கத்துறை சோதனையில் சில ஊழல்கள் வெளிவந்துள்ள நிலையில், இன்னும் பெருமளவிலான ஊழல்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அவை தொடர்பாக 1988ஆம் ஆண்டின் கையூட்டுத் தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது கடந்த பல ஆண்டுகளாக விசாரணை எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக திகழும் அந்தப் பிரிவு இனியும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் தொடர்பாக கையூட்டுத் தடுப்புப் பிரிவினரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ஏற்கனவே நான் கேட்டுக்கொண்டுள்ளவாறு சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

டாஸ்மாக் ஊழல்கள் எதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாமல் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. இன்னும் கேட்டால் இந்த ஊழல்களுக்கு அவரது ஆசி இருந்ததாகவே தோன்றுகிறது. மதுவிலக்குத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி முதலில் நியமிக்கப்பட்ட போதே பார் ஒதுக்கீட்டு ஊழல், அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது, வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது போன்றவை குறித்தெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 471 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட போது, இரு நாட்களுக்குள்ளாக அமைச்சரவையில் மாற்றம் செய்து, அவருக்கு அதே துறைகளை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்ததன் மூலம் டாஸ்மாக் ஊழலை அவர் ஆதரித்ததாகவே கருத வேண்டியிருக்கிறது.

டாஸ்மாக் ஊழலுக்குக் காரணமான மதுவிலக்குத் துறையின் இன்றைய அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழலில் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், மூலக் குற்றச் சாட்டுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.