anbumani emphasized nuclear mine in Kanyakumari district should be abandoned

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்; கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அணு உலைகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு அருகிலேயே அணுக்கனிம சுரங்கங்களை அமைக்க மத்திய அரசு துடிப்பதும், அதற்கு தமிழக அரசு ஓடோடிச் சென்று அனுமதி கொடுப்பதும் கண்டிக்கத்தக்கவை.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு (Indian Rare Earths Limited) தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கிள்ளியூர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. கிள்ளியூரையடுத்த கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் 1144 ஏக்கர் பரப்பளவில் இந்த சுரங்கம் அமைக்கப்படவுள்ளது. இச்சுரங்கத்தில் இருந்து மொத்தம் 59.88 மில்லியன் டன் அளவுக்கு மோனசைட் உள்ளிட்ட பல்வேறு அணுக்கனிமங்களை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கொண்டு 40 ஆண்டுகளுக்கு ஆலையை இயக்க முடியும்.

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசின் சுரங்கத்துறையும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளன. அடுத்தக்கட்டமாக சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி கோரி மத்திய அரசு அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு எடுத்து அனுமதி அளிக்க வேண்டும். இந்த அனுமதி கிடைத்து விட்டால் அணுக்கனிம சுரங்கங்களை அமைக்கும் பணிகள் தொடங்கி விடும். சுரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதற்காகவே வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்துவதாக இருந்தது. உள்ளூர் திருவிழாக்கள் காரணமாக இந்தக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், எந்த நேரமும் நடத்தப்பட்டு, அணுக்கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு நடந்தால், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

Advertisment

ஏற்கனவே நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 உலைகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மொத்தமாக 10 உலைகள் அமைக்கப்பட விருப்பதாக கூறப்படுகிறது. இன்னொருபுறம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓயாமல் நடக்கும் தாதுமணல் கொள்ளையால் 50&க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர்வள சீர்கேடு, கடல் அரிப்பு உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் அணுக்கனிம சுரங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டால் அங்குள்ள மக்கள் இன்னும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாவர். இது நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்படவுள்ள கிள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவில் அணுக்கதிர்வீச்சு நிலவும் பகுதிகள் ஆகும். மணவாளக்குறிச்சி பகுதியில் இயங்கும் இந்திய அருமணல் ஆலையால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக அங்குள்ள மக்கள், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அண்மைக் காலங்களில் இந்த வகை பாதிப்புகள் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் அங்கு அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும். அணுக்கதிர்வீச்சு தொடர்பான தீயவிளைவுகளும் ஏற்படும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாதது. மத்திய அரசின் திட்டங்கள் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மட்டும் முந்திக் கொண்டு ஆதரவளிப்பதன் மர்மம் என்ன? தென் மாவட்ட மக்கள் மீதான திமுக அரசின் அக்கறை இவ்வளவு தானா?

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்வதுடன், சுற்றுச்சூழல் அனுமதிக்காக நடத்தப்படவிருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.