Anbumani condemns providing customer service only in Hindi

Advertisment

தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது. தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.

Advertisment

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்த வேண்டும். இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.