Skip to main content

“கடலூர் பொதுக்கூட்டம்; அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம்” - அன்புமணி

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Anbumani condemns the denial of permission to the PMK meeting

 

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்காததைக் கண்டித்து, “அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம்” என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கடலூரில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்திருப்பதும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது பா.ம.க. மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மக்களை பாதிக்கும் சிக்கல்கள் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதிக்காமல் அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்து விடுவது ஜனநாயகப் படுகொலை ஆகும்.

 

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு, 34 ஆண்டுகள் நிறைவடைந்து 35-ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று (ஆகஸ்ட் 30) மாலை பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான எல்லா ஏற்பாடுகளும்  தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், எந்த காரணமும் இல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று நேற்று முன்தினம் கடலூர் மாவட்டக் காவல்துறை அறிவித்துள்ளது. கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி மறுப்பது நியாயமற்றது.

 

காவல்துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பாட்டாளி மக்கள் கட்சி மீது அடிப்படை ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை தமிழக அரசு முன்வைத்தது. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் கூட்டத்தை விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடத்திக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத பாமக, அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

 

பொதுக்கூட்டம் நடத்துவதென்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ((Indian Constitution) அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும். மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கான சிறந்த வழி பொதுக்கூட்டம் ஆகும். அடக்குமுறை ஆட்சி நடைபெற்ற ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இந்த உரிமை பறிக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து பொதுக்கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி பிரச்சினை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தி விடும் என்று  அரசு அஞ்சுவதையே இது காட்டுகிறது.

 

பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, பல்வேறு சவால்களை சந்தித்த கட்சியான திமுக, இப்போது என்.எல்.சி நிறுவனத்திற்கு ஏன்? அடிமையாகிக் கிடக்கிறது என்பது தான் எனக்கு புரியாத புதிராக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த அதே வடலூர் நகரில், கடந்த ஜூலை 7 ஆம் நாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதே வடலூர் நகரில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி நேற்று காலை நடத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் அனுமதியளிக்கும் காவல்துறை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி மறுக்கிறது என்றால், அதன் பின்னணியில் பொது நலன் இல்லை, அரசியலும் காழ்ப்புணர்ச்சியும் தான் இருக்கிறது.

 

கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டால், அதில் என்.எல்.சி விவகாரம் குறித்து பேசப்படும் என்று அரசும், காவல்துறையும் கூக்குரலிடுகின்றன. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி பிரச்சினை மட்டுமல்ல... சிப்காட் சுற்றுச்சூழல் சிக்கல்; சைமா சாயப்பட்டறை கழிவு விவகாரம்; தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தின் வளமையைப் பாதுகாப்பது; முந்திரி விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது; கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகும் சிக்கலுக்குத் தீர்வு காண தடுப்பணைகளை கட்டுவது; கொள்ளிடம், வெள்ளாறு, திருமணிமுத்தாறு ஆகியவற்றில் தடுப்பணை கட்டுவது; கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகளை அமைப்பது உள்ளிட்ட மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ளன. அவை அனைத்தையும் பற்றி பொதுக் கூட்டத்தில் பேசித் தான் ஆக வேண்டும். அதுதான் ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் கடமை.

 

கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் இந்த பிரச்சினைகள் குறித்து கடலூர் மாவட்டத்தில் தான் பொதுக்கூட்டம் நடத்தி பேச வேண்டும். கடலூர் மாவட்டத்தின் இந்த பிரச்சினைகள்  குறித்து விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்பது எந்த வகையில் நியாயம்? அதனால் தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்க பா.ம.க. மறுத்திருக்கிறது. இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காக்க பாட்டாளி மக்கள் கட்சி உறுதி பூண்டிருக்கிறது. அதற்காக எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு முறியடிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்திலேயே நடத்துவதற்கான அனுமதியை சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றெடுப்போம்; கடலூர் மாவட்டத்தை பாதிக்கும் என்.எல்.சி உள்ளிட்ட அனைத்து சிக்கல்கள் குறித்தும், அதற்கு திமுக அரசு துணை போவது குறித்தும் முழங்குவோம் என்று உறுதியளிக்கிறேன். அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை அடக்குமுறைகளின் மூலம் பணிய வைக்க முடியாது என்பதை உலகிற்கு நாம் நிரூபிப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.