Advertisment

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடிக்கும்! அன்புமணி கண்டனம்

anbuma

Advertisment

காவிரி சிக்கலில் கூடுதல் கெடு கோருவதா? மத்திய அரசின் தீய நோக்கம் அம்பலமானது என கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்க கூடுதலாக இரு வார கால அவகாசம் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத் தேர்தலில் அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்காகவே காவிரி செயல்திட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்பது இதன்மூலம் உறுதியாகியிருக்கிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் 2007-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள்ளாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய ஆட்சியாளர்களின் சித்து விளையாட்டுக்களால் அதன்பின் 11 ஆண்டுகளாகியும் இன்று வரை வாரியம் அமைக்கப்படவில்லை. கடந்த மார்ச் 29-ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஸ்கீம் என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3-ஆம் தேதிக்குள் புதிய செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்யும்படி ஆணையிட்ட நிலையில், அதையும் மதிக்காத மத்திய அரசு, இப்போது கூடுதலாக இரு வார அவகாசம் கோரியிருப்பதை ஏற்க முடியாது.

Advertisment

மத்திய அரசின் இந்நடவடிக்கை முழுக்க முழுக்க தீய நோக்கமும், அரசியல் உள்நோக்கமும் கொண்டதாகும். காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைய வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. மே 3-ஆம் தேதிக்குள் காவிரி செயல்திட்டத்தை தாக்கல் செய்தால் அது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் தான் இந்த வழக்கில் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோருகிறது. அவ்வாறு கூடுதலாக இரு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டால் அதற்குள் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிடும்; அதன்பின்னர் விருப்பம் போல் செயல்திட்டத்தை தயாரிக்கலாம் என்பது தான் மத்திய அரசின் திட்டமாகும்.

மத்திய அரசின் இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக தள்ளுபடி செய்து, மே 3-ஆம் தேதிக்குள் காவிரி செயல்திட்டத்தை தாக்கல் செய்யும்படி மீண்டும் ஆணையிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் இருந்த தமிழக வழக்கறிஞர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த மனுவும் வரும் 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதே தமிழகத்திற்கு பாதகமான விஷயமாகும். இது மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் செயலாகும். இந்த மனுவும் வரும் 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் கூறியிருப்பதால் அதுவரை வரைவுச் செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யாது. உடனடியாக வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. இறுதியில் மத்திய அரசு கோரியவாறு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய கட்டாயத்தை உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு ஏற்படுத்தும். அதன்பின் காவிரி மேலாண்மை வாரியம் எப்போது, எத்தகைய அதிகாரங்களுடன், எந்த வடிவத்தில் அமைக்கப்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

மே மாதம் 3&ஆம் தேதிக்குள் வரைவுச் செயல்திட்டம் தாக்கல் செய்யப்படாவிட்டால், அடுத்த ஆண்டும் குறுவை சாகுபடிக்காக காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. இதனால் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்படும். இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய அரசு, ஒரு மாநிலத்தில் அரசியல் லாபம் தேடுவற்காக இன்னொரு மாநிலத்தில் நலன்களை பறிகொடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல் ஆகும். கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்திற்கு எத்தகைய துரோகம் செய்வதற்கும் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தயங்காது என்பதைத் தான் இது காட்டுகிறது. காவிரி செயல்திட்டத்தை தயாரிக்க ஒருநாள் போதுமானது எனும் நிலையில் மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் கோருவது தமிழகத்திற்கு நீதி கிடைப்பதை தடுக்கும் செயலாகும். இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு தமிழக நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe