Skip to main content

உயர் அதிகாரிகளின் அலட்சியம்; மோதிக்கொள்ளும் இரு துறை - அன்புமணி

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Anbumani comment on the issue between the police and transport department

அரசுப் பேருந்துகளில்  இலவச பயணம் தொடர்பான விவகாரம் காவல்துறை - போக்குவரத்துக் கழகங்கள் இடையிலான மோதலாக மாறிவிட கூடாது என பாமக தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஒருவர் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்க, நடத்துநர் மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் கவலையளிப்பவையாக உள்ளன. காவலர்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் விஷயத்தில் தமிழக அரசுத் தரப்பில் இரு ஆண்டுகளாகக் காட்டப்படும் அலட்சியம் காவல்துறைக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடக் கூடாது.

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நாங்குநேரி என்ற இடத்தில் ஏறிய ஆறுமுகப்பாண்டி என்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி நடத்துநர் கேட்ட போது, பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார். காவலர் பணியில் இருப்பவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாக்குவாதத்தை பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இதுகுறித்து  விளக்களித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், ‘‘அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும்தான் பயணிக்க முடியும்’’ என்று கூறியது.

Anbumani comment on the issue between the police and transport department

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பேருந்துகளுக்கு தண்டங்களை விதித்து வருகின்றனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பேருந்துகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், காவலர்களின் இலவச பயணம் குறித்த போக்குவரத்துக் கழக அறிவிப்புக்குப் பிறகு, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் இது பழிவாங்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இதேநிலை தொடர்ந்தால், இது காவல்துறைக்கும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அத்தகைய மோதல் ஏற்பட்டால் அது பொதுமக்களுக்கு கடும்   பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் சட்டம்  ஒழுங்கையும் பாதிக்கக்கூடும். அதற்கு முன்பாக இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஆனால், இது குறித்து எந்தக் கவலையுமின்றி தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுகிறது. காவல்துறைக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும்  இடையிலான சிக்கலுக்கு தீர்வு காண தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினராக இருந்தாலும், போக்குவரத்துக் கழக பணியாளர்களாக இருந்தாலும் களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றுபவர்கள் ஆவர். இரு தரப்பினருக்குமே நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் கிடையாது. தேவை ஏற்படும் போது  வழக்கமான பணி நேரத்தை விட அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை இருதரப்புக்கும் ஏற்படும். பல நேரங்களில் ஓய்விடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இரு தரப்பினருக்கும் ஏற்படும். காவலர்கள், போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஆகிய இரு தரப்புக்குமே ஒப்பீட்டளவில் மிக அதிக பணி நேரமும், மிகக்குறைந்த ஊதியமும் தான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்களிடம் அரசே மோதலை ஏற்படுத்தக்கூடாது.

அரசுப் பேருந்துகளில் காவலர்களை இலவசமாக பயணிக்க அனுமதிப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு  மிக எளிதாக தீர்வு காண முடியும். இன்னும் கேட்டால், அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வராத காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் அலட்சியமே தமிழகத்தில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13.09.2021 அன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘‘காவலர் முதல் ஆய்வாளர் வரை தாங்கள் பணி புரியும் மாவட்டங்களுக்குள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக செல்ல நவீன அடையாள அட்டை கொடுக்கப்படும்’’ என்று அறிவித்தார். அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், முதலமைச்சரின் அறிவிப்புக்கான அரசாணை வெளியிடப்படவில்லை. முதலமைச்சரின் அறிவிப்பு வெளியான பிறகு 2021 நவம்பர் மாதத்தில், இது தொடர்பாக அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிய போக்குவரத்துத் துறை துணை செயலாளர் உதயபாஸ்கர், அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தகுதியுடைய காவலர்களின் பட்டியலை அனுப்பி வக்கும்படி கூறியிருந்தார். அதன் பின்னர் இந்த விவகாரத்தில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

காவல்துறை பட்டியல் அனுப்பியிருந்தால், அவர்களுக்கு இலவச பயணம் அனுமதி வழங்குவதால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கணக்கிட்டு அந்தத் தொகையை அரசு செலுத்துமா? காவல்துறை செலுத்துமா? என்பது தீர்மானிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கும். அதனடிப்படையில் காவலர்களுக்கு  அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த நடவடிக்கைகள் எதுவுமே இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அரசுத்துறை உயரதிகாரிகளின் அலட்சியத்தால் களத்தில் பணியாற்றும் இரு துறையினர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அரசுப் பேருந்துகளில் காவல்துறையினர் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையை வெளியிடச் செய்ய வேண்டும். அதன் மூலம் மக்களுக்காக  களத்தில் பணியாற்றும் காவலர்களுக்கும், அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கும் இடையே மோதலைத் தவிர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்