பாமகவில் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு ராமதாஸ் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டமானது தைலாபுரம் அருகே உள்ள ஓமந்தூரில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நாளை (08.07.2025) காலை நடைபெறுவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவித்துள்ளார்.
அதன்படி இந்த கூட்டமானது சென்னை தியாகராயர் நகரில் உள்ள திலக் தெருவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக அன்புமணி ராமதாஸ் தரப்பில் நிர்வாக குழு செயற்குழு பொதுக்குழு என எந்த கூட்டத்தைக் கூட்டுவதற்கும் ஏற்கனவே பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவராகிய தனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது எனத் தெரிவித்திருந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் நாளை நிர்வாக குழுவைக் கூட்ட உள்ளார். அதே சமயம் ராமதாஸ் செயற்குழுவை நடத்த உள்ளது பாமக அரசியல் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.