Anbumani alleges  Student enrollment in government schools is low

Advertisment

அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர், மாணவியரை சேர்க்கப்படுவதை வகை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், 5 லட்சம் மாணவர் சேர்க்கை இலக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் சேரத்தகுதியான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டு விட்ட நிலையில், இனி எவரும் அரசு பள்ளிகளில் சேர வாய்ப்பில்லை என்றும், அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் தான் மிகவும் குறைவாக இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Advertisment

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 31, 336 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் ப்ள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் நடைபெற்று வருகின்றன. இத்தனைப் பள்ளிகளில் வெறும் 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றால், ஒரு பள்ளிக்கு சராசரியாக 4.78 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று தான் பொருள். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 5 மாணவர்கள் கூட சேரத் தயாராக இல்லை என்றால், அரசு பள்ளிகளுக்கு மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 31, 336 பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டும் தான். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டும் தான் பயில்கின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த புள்ளிவிவரங்களே விளக்குகின்றன.

அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் அங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும் தான். தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பல பள்ளிகளில் மேற்கூரையின் பூச்சு உதிர்ந்து விழுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. அதேபோல், ஆசிரியர்களும் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்கள் மட்டும் தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

Advertisment

எனவே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் மூலம் அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர், மாணவியரை சேர்க்கப்படுவதை வகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.