Skip to main content

அத்திக்கடவு திட்டம், கரும்பு விலையில் விவசாயிகளுக்கு அரசு பெருந்துரோகம்! அன்புமணி

Published on 15/03/2018 | Edited on 15/03/2018


 

அத்திக்கடவு திட்டம், கரும்பு விலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசு பெருந்துரோகம் இழைத்துள்ளது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக அரசின் 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடும்படியாக சிறப்பானத் திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, இளைஞர்கள் மற்றும் உழவர்களுக்கு எதிராக ஏராளமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கரும்புக் கொள்முதல் விலை தொடர்பான விவகாரத்தில் சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு ஆதரவாகவும் உழவர்களுக்கு எதிராகவும் அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
 

மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில், அந்த மாநிலம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு  தீர்வு சொல்லப்பட வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அத்தகையத் தீர்வுகள் எதுவும் இல்லை. தமிழகத்தின் ஒன்றரை கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் வேலைவாய்ப்புக்கு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள உழவர்களுக்கு எந்த நிவாரணத் திட்டங்களும் வெளியிடப்படவில்லை.
 

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசே ஊக்கத்தொகை வழங்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்ட நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமான அறிவிப்பை தான்  வெளியிட்டுள்ளார். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்லுவதைப் போலத் தான் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்திருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கும் விஷயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பு உழவர்களின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், தமிழக அரசோ, சர்க்கரை ஆலைகளின் கோரிக்கையை ஏற்று ரங்கராஜன் குழு பரிந்துரைகளை செயல்படுத்தியிருக்கிறது. இது உழவர்களுக்கு இழைக்கப்பட்ட பெருந்துரோகமாகும்.
 

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை என்பது உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்பதாகும். அதன்படி பார்த்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,970 கொள்முதல் விலை வழங்கப் பட வேண்டும். இது தான் உழவர்களுக்கு கட்டுபடியாகும் விலையாக அமையும். மாறாக ரங்கராஜன் குழு பரிந்துரைப்படி சர்க்கரை ஆலைகள் முதல்கட்டமாக மத்திய அரசு நிர்ணயித்த விலையை ( நடப்புப் பருவத்தில் டன்னுக்கு ரூ.2550) வழங்கினால் போதுமானது. மாநில அரசு பரிந்துரைக்கும் விலையை வழங்கத் தேவையில்லை. அடுத்தக்கட்டமாக சர்க்கரை ஆலைகள்,  வெறும் சர்க்கரையை மட்டும் உற்பத்தி செய்வதாக இருந்தால், மொத்த வருமானத்தில் 70 விழுக்காட்டை அவர்களிடம் கொள்முதல் செய்த கரும்பின் அளவுக்கு இணையான விகிதத்தில் பகிர்ந்து அளிக்க வேண்டும். சர்க்கரையுடன்  எரிசாராயம், கரும்பு சக்கை, மின் உற்பத்தி ஆகியவற்றையும் செய்யும் சர்க்கரை ஆலைகள் வருவாயில் 75 விழுக்காட்டை உழவர்களுக்கு வழங்க வேண்டும். இந்தத் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால்  உழவர்களுக்கு ஓரளவு நல்ல விலை கிடைக்கும். ஆனால், பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் நஷ்டக் கணக்கைக் காட்டுவதால் மத்திய அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு காசு கூட கூடுதலாகக் கிடைக்காது.
 

சர்க்கரை ஆலைகள் மாநில அரசின் பரிந்துரை விலையை வழங்காவிட்டால், அதை தமிழக அரசு ஈடு செய்யும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதும் ஏமாற்று வேலை தான். உண்மையில் நடப்பாண்டில் தமிழக அரசின் பரிந்துரை விலையாக டன்னுக்கு (ரூ.2550+650) ரூ.3200 நிர்ணயிக்கப்பட்டு  இருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் மாநில பரிந்துரை விலையை இதுவரை அறிவிக்காத தமிழக அரசு, கடந்த ஆண்டின் விலையில், போக்குவரத்துச் செலவைக் குறைத்து ரூ.2750 தான் கொள்முதல் விலையாக கணக்கிட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசு அளிக்கும் மானியத்தைச் சேர்த்தாலும் ரூ.2750 மட்டுமே கொள்முதல் விலையாக கிடைக்கும். இது சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி கிடைக்க வேண்டியதை விட டன்னுக்கு ரூ.2220 குறைவாகும். எனவே, இதை ஏற்க முடியாது. ரங்கராஜன் குழு பரிந்துரைக்கு பதிலாக எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
 

அடுத்ததாக,  பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.3523 கோடி செலவில்  கீழ் பவானி அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் எடுக்கும் திட்டமாக அத்திக்கடவு- அவினாசித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், கொள்கை விளக்கக் குறிப்பிலும்  தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1789 கோடி செலவில் காளிங்கராயன் அணையிலிருந்து 1.5 டி.எம்.சி மட்டும் தண்ணீர் எடுக்கும் திட்டமாக அத்திக்கடவு- அவினாசி திட்டம் குறுக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது தெரியவில்லை.
 

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.250 கோடி நிதி என்னவானது என்பது தெரியாத நிலையில், இந்த ஆண்டும் ரூ.250 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதேஅளவில்  நிதி ஒதுக்கினால் இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது.
 

எனவே, ஏற்கனவே உருவாக்கப்பட்ட பழைய அத்திக்கடவு & அவினாசி திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். அத்திட்டத்திற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒரே தவணையில் ஒதுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்