
அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த ஆசிரமத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூர் எனும் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும்மேலாக அன்பு ஜோதி என்ற மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜபருல்லா என்பவர் இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் அடிப்படையில் கடந்த பத்தாம் தேதி காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 142 பேரை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். அதில் 109 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள், ஒரு குழந்தை. விசாரணையின் அடுத்தடுத்த கட்டமாக பல்வேறு தகவல்கள் வெளியாயின. முறையாக அனுமதி பெறாமல் காப்பகம் நடந்து வந்ததும், அதேபோல் அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சங்கிலியில் கட்டிப்போட்டு பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் உரிமையாளர் ஜூபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை அன்பு ஜோதி ஆசிரமம் மூடப்பட்டது. நேற்று விக்கிரவாண்டி தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரமத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரமப் பெண்களிடம் நடத்திய விசாரணையில் அங்கு ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் இது தொடர்பான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும்காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)