
ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு இன்று பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம், பழையூர் பொதுமக்கள் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, 'எங்கள் ஊரில் சம்பவத்தன்று கும்பாபிஷேகம் தீர்த்தம் எடுத்து வந்த பெண்கள் மீது ஒரு கும்பல் பட்டாசுகளை கொளுத்தி போட்டு, தகாத வார்த்தைகளால் பேசி கிண்டல் செய்துள்ளனர். இது குறித்துக் கேட்டபோது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அந்த கும்பல் நேற்று பழையூர் கோவில் பவுர்ணமி பூஜையின் போது தகராறில் ஈடுபட்டனர்.
கோவில் வரவு செலவுகளை பார்க்கும் முதியவரை அடித்து கீழே தள்ளி உள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் எங்கள் ஊரில் சட்டவிரோதமாக மதுபானம் கந்து வட்டி தொழில் சீட்டாட்டம், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களாகிய நாங்கள் மிகவும் அவதி அடைந்துள்ளோம். அந்த கும்பல் மீது ஏற்கனவே கொலை வழக்கு கந்துவட்டி வழக்கு சட்டவிரோத மதுபான விற்பனை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.