
சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற்றால் சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிரான சிஏஏ, என்ஆர்சி சட்டங்களும் அமலுக்கு வந்துவிடும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் எச்சரித்துள்ளார். ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஓமலூர் செட்டிப்பட்டியில் முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து திங்களன்று (மார்ச் 22) சிறப்பு பரப்புரை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: ''சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் சிறுபான்மையினரும், எதிர்க்கட்சிகளும் போராடி வந்தன. கரோனா பரவத் தொடங்கியதால் அந்த போராட்டங்கள் அப்படியே நின்றுவிட்டன.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவ்விரு சட்டங்களையும் ஆதரித்து இருக்கமாட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான இந்த சட்டங்களை ஆதரிக்கிறது. பாஜக அழுத்தம் கொடுத்ததால் ஆதரித்ததாக இப்போது அதிமுக பொய் சொல்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 171 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதில் ஒருவர்கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை என்பதில் இருந்தே அக்கட்சி சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள முடியும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் இருக்கும் வரை இந்த நாட்டில் சிஏஏ, என்ஆர்சி சட்டங்களை அமல்படுத்த முடியாது. இங்கே இரட்டை இலை வந்தால், இவ்விரு சட்டங்களும் வந்துவிடும். பாசிச பாஜக, உள்ளே வந்துவிடக்கூடாது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா, பூடான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமாம். ஆனால், இலங்கையில் இருந்து இங்கு வந்துள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டத்தில் இடமில்லை என்கிறது பாஜக. அவர்கள் வட இந்தியர்களைத்தான் இந்துக்களாக கருதுகின்றனர். தமிழர்கள் நலனுக்கு எதிரான கட்சி, பாஜக. அதிமுக, பாஜகவுக்கு விலை போய்விட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது அதிமுகவுக்கு ஏழைகளுக்கு 1500 ரூபாய் கொடுக்கத் தோன்றவில்லை. கரோனாவில் கஷ்டப்பட்டபோது கொடுக்கத் தோன்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையேற்றால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை 35 ரூபாய் வரை குறையும். பாஜக, பணக்காரர்களுக்கு 1.54 லட்சம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகை அளித்துவிட்டது. அதை ஈடுகட்டத்தான் பெட்ரோல், டீசல் மீது 20 சதவீதம் செஸ் வரி விதித்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். பாஜக, பணக்காரர்களுக்கான கட்சி'' என்றார் ஆனந்த் சீனிவாசன்.

திமுகவை சேர்ந்த ‘நமது தளபதி நற்பணி மன்றம்’ தலைவர் கே.ஆர்.மகேந்திரன் பேசுகையில், ''அதிமுக ஆட்சியில், ஓமலூர் தொகுதியில் பல இடங்களில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது. பாஜகவின் இந்துத்துவத்தை வெல்லமண்டி பழனிசாமி ஆதரிப்பதால்தான் இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வரை எடப்பாடி பழனிசாமி என்று சொல்லக்கூடாது என்றதால் அவர் செய்து வந்த தொழிலை வைத்து குறிப்பிடுகிறேன். ஜிஎஸ்டி என்பதே வட இந்தியர்களின் நலன்களை குறி வைத்துக் கொண்டு வரப்பட்ட மோசடியான வரிவிதிப்புதான். வட இந்தியர்கள் துண்டு சீட்டில்தான் வணிகம் செய்கின்றனர். தமிழர்களைப் போல அவர்கள் 'பில்' கொடுத்து வியாபாரம் செய்வதில்லை. அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காகத்தான் ஜிஎஸ்டியை கொண்டு வந்து நம் மீது திணித்துள்ளனர்.
தமிழர்களுக்கு எதிரான பாஜக, அதிமுகவை புறக்கணிக்க வேண்டும். ஒவ்வொரு சிறுபான்மையினரும் தலா 10 வாக்குகளை திரட்டி திமுக கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்,'' என்றார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிற்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகி மருத்துவர் செந்தில் பேசினார். திமுக நிர்வாகி லியாகத் அலிகான் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.