ADVERTISEMENT

’’நூலகங்கள் படைப்பாளர்களையும் காப்பாற்றுகின்றன!’’ -நூலகத் திறப்பு விழாவில் கவிஞர் அமுதபாரதி முழக்கம்!

03:22 PM Sep 16, 2019 | Anonymous (not verified)

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி காலை, சென்னை போரூரில் கவிஞர் நர்மதா உருவாக்கிய பொது நூலகத்தின் திறப்புவிழா சிறப்பாக நடந்தது.

ADVERTISEMENT


நர்மதாவின் ’சன்பீம் பள்ளியில்’ பெண் அமைப்பில் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில் அரிய, சிறந்த நூல்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கப்படிருக்கின்றன. அங்கே நூல்களை வாசிக்க அமைதியான அறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நூலகத்தை ஆய்வறிஞர் முனைவர் நா.நளினிதேவி திறந்துவைத்தார். நிகழ்ச்சியை நர்மதாவின் புதல்வி தீபா, சிறப்பாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கினார். கவிஞர் அமுதா தமிழ்நாடன், தன் அறிமுக உரையில், நர்மதா பெண் அமைப்பைத் தொடங்கி நடத்துவது குறித்தும் மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சியைக் கொடுத்துவருவது குறித்தும் தன் அறிமுக உரையில் குறிப்பிட்டு, நர்மதாவின் முயற்சியைப் பாராட்டினார்.

இந்து இதழின் தலைமைத் துணை ஆசிரியர் மானா பாஸ்கரன் தன் வாழ்த்துரையில் ”நான் இந்த நூலகத்திற்குக் கொடுத்திருக்கும் நூல்கள், ஒரு சகோதரிக்கு உடன்பிறந்தவன் கொடுக்கும் சீர்வரிசை போன்றது” என்று குறிப்பிட்டு, உற்சாகமாகப் பாராட்டினார்.


வாழ்த்துரை வழங்கிய நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரான ஆரூர் தமிழ்நாடன் “சிறந்த நூல்களில் கை வைத்தவர்கள்தான் வெற்றிப் படிக்கட்டுகளில் கால் வைத்திருக்கிறார்கள். படைப்பாளர்கள் படைத்த நூல்கள் அவர்கள் வாழ்ந்த காலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. அவர்கள் வாழ்ந்த சமூகத்தை நமக்கு அறிமுகம் செய்கின்றன. என்னை இப்படி பல படைப்பாளர்கள் அவர்கள் காலத்திற்குள் அழைத்துச்சென்றிருக்கிறார்கள். அவர்களோடு வாழவைத்திருக்கிறார்கள்.

நான் வள்ளுவனின் காலத்திற்குள் நுழைந்திருக்கிறேன். அவன் அறிமுகம் செய்யும் காதல் பெண்களின் மெல்லுணர்வு கண்டு திகைத்திருக்கிறேன். அவன் காலத்திய சமுதாயத்தையும் மனிதர்களையும் பார்த்திருக்கிறேன். அவன் அவன் காலத்தில் எப்படியெல்லாம் போற்றப்பட்டிருப்பான் என்று சிந்தித்திருக்கிறேன். அவன் மரணம் நடந்திருக்கும் என்று கலங்கியிருக்கிறேன். அவனைப் போன்ற மகத்தான படைப்பாளர்களை நூல்களும் நூலகங்களும் நம்மிடம் அழைத்துவருகின்றன. இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகள்தான் மொழியையும் இனத்தையும் காக்கின்றன” என்றதோடு நூலகத்தை உருவாக்கிய கவிஞர் நர்மதாவின் கவித்திறனையும் பாராட்டினார்.


வாழ்த்துரை வழங்கிய கவிஞர் உமாமோகனும் , நர்மதாவின் நூலக முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்.

வரவேற்புரை வழங்கிய ஓவியக் கவிஞர் அமுதபாரதி தன் வாழ்த்துரையில் “புத்தகங்கள் அதைப் படைத்த படைப்பாளர்களையும் பாதுகாக்கின்றன. படைப்பாளர்களின் படைப்புகள் எந்த நூலகத்தில் எப்படிச் சேரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருமுறை ம.பொ.சி. திருக்குறள் தொடர்பான ஒரு முக்கியமான நூலைத் தேடினார். அது இங்கே எங்கேயும் கிடைக்கவில்லை. கடைசியில் அது லண்டனில் உள்ள நூலகம் ஒன்றில் இருந்தது.அந்த புத்தகம் சிறகு முளைத்து அங்கே போயிருந்தது. குழந்தைகளின் மனம் அப்பழுக்கற்றது. அவர்களுக்கு உரிய நூல்களை நூலகங்கள் வழங்கவேண்டும்.அது அவர்களை உயர்த்தும்” என்றார் தன் ஹைகூ அனுபவங்களையும் கலந்து.

தீபா


முனைவர் நளினிதேவி, நூல்களில் தான் ஒரு பட்டுப் பூச்சியாகவும், தும்பியாகவும் திளைத்து வருவதாகக் கூறித் தன் வாழ்த்துரையைக் கவிதையாக வழங்கினார். மேலும் பாடலாசிரியர் வேல்முருகன், கல்வியாளர் உமாகேஸ்வரி உள்ளிட்டோரும் கவிஞர் நர்மதாவைப் பாராட்டினர். கவிஞர் நர்மதா ஏற்புரையை நன்றியுரையாக ஆற்றினார்.


நிகழ்ச்சியில் முனைவர் பாட்டழகன், எழுத்தாளர் லதா, கவிஞர் மனோகரி மதன், த. இலக்கியன் உள்ளிட்ட படைப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கவிஞரின் மகன் இளங்கோவன் உள்ளிட்ட குடும்பத்தினர் வந்திருந்தவர்களை அன்போடு வரவேற்றனர்.
கவிஞர் நர்மதாவின் திருப்பணிகள் பாராட்டுக்குரியன.

தொகுப்பு: கதிரவன்

படங்கள்: ஒளிப்படக் காதலர்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT