ADVERTISEMENT

அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முடிவு

11:16 AM Jan 12, 2024 | prabukumar@nak…

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அமோனியா கசிவு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் தனிச் செயலாளர் தலைமையில் நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் இது குறித்து அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT