
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுவையில், ''அதிமுகவை ஒழிக்க வேண்டும் இரட்டை இலையை வீழ்த்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பொழுது விடிந்தால் அதிமுக அழிந்துவிடும்; அதிமுக தோற்றுவிடும்; அதிமுக இருக்காது இப்படி ஜாதகத்தை கணிப்பதில் ஒரு ஜோசியராக சமீப காலமாக மாறி இருப்பது நகைச்சுவையாக தான் இருக்கிறது.
கற்பூரமாக காற்றில் கரைந்து போகிற அமமுகவை காப்பாற்றுவதற்கு அவர் நிற்க வேண்டும். அமமுக கப்பலில் ஒரு பெரிய ஓட்டை விழுந்தது. அது மூழ்கப் போகின்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு தொண்டராக, நிர்வாகிகளாக, தலைவராக அவரை விட்டு விட்டு தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அதிமுகவை தேடி தாய் கழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த முடியாத இயலாமையால் விரக்தியில் அவர் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. அமுமுக பொதுச்செயலாளர் விரக்தியின் விளிம்பிலே நின்று உளறுவதை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்த போவதில்லை. அதிமுகவின் எதிர்காலத்தை அவர் கணிப்பதை விட்டுவிட்டு அவருடைய கட்சியினுடைய எதிர்காலத்தை பாதுகாப்பாக கணித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அவரை தவிர அவருடைய சுற்றி நிற்கும் தொண்டர்கள் யாரும் அவரோடு இருக்க மாட்டார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மையான கள நிறுவனம் நிலவரம்'' என்றார்.