நாகையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பேனர்களை அகற்றாத காவல்துறையிடம் டிராபிக் ராமசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பேனர்கள் அகற்றப்பட்டது. அதை தெரிந்து கொண்ட அமமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
வரும் 25 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் அவுரித்திடலில் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக அக்கட்சியினர் டி.டி.வி.தினகரனை வரவேற்று நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் அனுமதியின்றி ஆங்காங்கே விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நாகைக்கு வந்திருந்தார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை கண்டு ஆத்திரம் அடைந்தார். அதனை தொடர்ந்து அரசியல் கட்சியினரின் பதாகைகளை அகற்ற வேண்டுமென அங்கு குழுமியிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து டிடிவி.தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த ஆள் உயர விளம்பர பதாகைகளை அவசர அவசரமாக அகற்றினர்.
இதை அறிந்து அங்கு திரண்ட அமமுக தொண்டர்கள் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதோடு அடிதடி எழும் நிலையானது. அதனை தொடர்ந்து அனைத்து விளம்பர பதாகைகளையும் அகற்றினால்தான் இந்த இடத்தை விட்டு செல்வேன் என்று போலிசாருடன் பிடிவாதமாகவே இருக்கிறார் ராமசாமி.