two

Advertisment

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு 75 % மானியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை 8 வாரத்தில் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் தொடர்பான அறிவிப்பாணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 விழுக்காடு மானியம் அல்லது 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ, அத்தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு கூடுதலாக 25 விழுக்காடு மானியம் வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், சமூக நலத் திட்டங்கள் மற்றவர்களுக்கு வழங்கும் மானியத்தை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 கூறுவதாகவும், எனவே சட்டத்தின்படி 25 விழுக்காடு மானியம் அதிகம் வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக கடந்த ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 5 ஆம் தேதிகளில் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இதுதவிர அரசு திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் (பொதுப்பிரிவில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதால்) 4 ஆயிரம் மாற்று திறனாளிகள் பயன்பெறும் நிலையில் அவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கு இன்று நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவை தமிழக அரசு 8 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

சி.ஜீவா பாரதி