
'புதிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும்' என்ற மத்திய அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து தமிழகத்தில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், இந்த திணிப்பை எதிர்த்தும் திமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினர் நேற்று கையெழுத்து இயக்கம் ஆரம்பித்திருந்தனர்.
இன்று ராணிப்பேட்டை மாவட்டம் தலக்கோலம் பகுதியில் ராஜாதித்ய சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ள சிஏஎஸ்எப் மண்டல பயிற்சி மையத்தில் ஆண்டு விழாவானது நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட நிலையில் அவரது உரையில், ''மத்திய தொழில் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார். பிரதமர் மோடி வந்த பிறகுதான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளும் மாநில மொழிகளில் படிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது'' என்றார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் வகையில் பாஜக நிர்வாகி அருள்மொழி என்பவரின் பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அமித்ஷா புகைப்படத்திற்கு பதிலாக இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பாஜக பெண் நிர்வாகியான அருள்மொழியோ, 'அந்த போஸ்டருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரை பயன்படுத்தி இவ்வாறு செய்துள்ளனர். காவல்துறையில் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.