Skip to main content

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! தமிழக அரசு சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க வேண்டும்: திருமா

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
thiru

 

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! தமிழக அரசு சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க வேண்டும்! என்று 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை: ’’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் பழைய நிலையிலேயே தொடர வகை செய்யும் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காகப் போராடிய இயக்கங்களுக்கும் ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கும் உச்சநீதிமன்ற வழக்கில் தம்மையும் இணைத்துக் கொண்ட கேரள, தமிழக அரசுகளுக்கும் எமது நன்றியை உரித்தாக்குகிறோம். இந்த சட்டத்தின்படி எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அளித்தவுடன் அதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது. காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் நேரடியாக களம் இறங்கிப்  போராடினார். பல்வேறு தலித் இயக்கங்களின் சார்பில் இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு நாடே ஸ்தம்பித்தது. அந்த நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் சாதிவெறியர்களும் காவல்துறையினரும் கூட்டு சேர்ந்து நடத்திய தாக்குதலில் தலித்துகள் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பொய் வழக்குகளில் தலித்துகளும் தலித் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தலித் இயக்கங்களும் காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பாஜக அரசு பணியவேண்டிய நிலை ஏற்பட்டது.

 

தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க திமுக தலைமையில் 9 கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தலித் இயக்கங்களை ஒருங்கிணைத்து கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினோம். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய இரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடிய கட்சிகள்  அனைத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் சிறப்பு நீதிமன்றங்களை முறையாக தமிழக அரசு இன்னும் அமைக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட தமிழக அரசு அதை நிறைவேற்றாமல் உள்ளது வேதனையளிக்கிறது. எனவே, சிறப்பு நீதிமன்றங்களை விரைந்து அமைத்திட வேண்டுமாய்த் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் அதிகாரிகள்?

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சிக்கு ஜீலை 2ந்தேதி ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே, விளம்பர பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது.   இதுப்பற்றி அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள்  முறையிட்டனர். இதில் அனுமதி பெறாத பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டது.  தனியார் நிறுவன ஜூவல்லரி ஒன்றின் பேனரும் அகற்றப்பட்டுள்ளது.  
 

s

அந்த பேனர் ஜீலை 3ந்தேதியான இன்று மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்த்து செங்கம் நகர கடைக்காரர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்தவர்களிடம், அவர்கள் பேனர் வைக்க அனுமதி பெற்றுள்ளார்கள். அதனால் மீண்டும் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றுள்ளார்கள்.

 

பேனர் வைக்க அனுமதி பெற்றுள்ளார்கள் என்றால், அது எத்தனை நாளைக்கு, நீதிமன்ற உத்தரவு எத்தனை நாள் வரை வைக்கலாம் என்கிற வழிக்காட்டல் உள்ள நிலையில் அதனை கடைப்பிடித்து தான் இந்த பேனர் வைக்க அனுமதி தந்துள்ளார்களா ?, அனுமதியோடு தான் பேனர் வைத்துள்ளார்கள் என்றால் பின்னர் ஏன் அதனை நேற்று கழட்ட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.  அவர்களோ, பணம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள், பேனர் வைப்பதை கண்டுக்கொள்ளாமல் விடுவதால் தான் இந்த சிக்கல். இந்த பேனர் அனுமதி பெற்று தான் வைக்கப்பட்டுள்ளது என்றால், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுப்படி எத்தனை நாள் வைக்க அனுமதிக்கப்படுகிறது, அதற்கான அனுமதி தேதி, எண் போன்றவை விளம்பர பேனரில் குறிப்பிட வேண்டும் என்கிற உத்தரவு உள்ளது அது ஏன் இந்த பேனரில் இல்லையே என கேள்வி எழுப்புகின்றனர்.

 
இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் அதிகாரிகள்?

Next Story

திருஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசுடைமைக்கி தமிழக அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:’’தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் திருஆரூரான், அம்பிகா ஆகிய பெயர்களில் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து விவசாயிகளின் பெயர்களில் ரூ.450 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறது. உழவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையிலான இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

 

ட்

 

திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, கோட்டூர், கடலூர் மாவட்டம் இறையூர், ஏ.சித்தூர் ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.125 கோடிக்கும் கூடுதலாக நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆனால், இரு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலுவைத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகம், நிலுவைத் தொகை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து சில படிவங்களில் கையெழுத்து வாங்கி, அவற்றை வைத்து விவசாயிகள் பெயரில் வங்கிகளில் இருந்து பல நூறு  கோடி கடன் வாங்கியுள்ளது.

 

கடலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.90 கோடியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.360 கோடியும் கடன் வாங்கப்பட்டு மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எந்தெந்த விவசாயிகளின் பெயர்களில் எல்லாம் கடன் வாங்கப்பட்டதோ, அவர்களுக்கு வங்கிகள் ஜப்தி அறிவிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே இந்த மோசடி வெளிவந்துள்ளது.

 

ஆலை நிர்வாகத்தின் இந்த செயல் மிகப்பெரிய மோசடிக் குற்றம் என்பது மட்டுமி

ன்றி, மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகமும் ஆகும். உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு உரிய   விலையை வழங்காததுடன், அவர்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பதன் மூலம் விவசாயிகளை மீள முடியாத நெருக்கடியில் தள்ளியிருக்கிறது ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம். இதற்காக ஆலை அதிபர் ராம் தியாகராஜனை காவல்துறை கைது செய்திருப்பது பாராட்டத்தக்கது.

 

பொதுத்துறை வங்கி உயரதிகாரிகளின் துணை இல்லாமல் இத்தகைய மோசடியை திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் அரங்கேற்றியிருக்க முடியாது. விவசாயிகள் வேளாண் பயன்பாட்டுக்காக சில ஆயிரம் ரூபாய் கடன் கேட்டால் கூட, அதற்கு ஏராளமான ஆவணங்களைக் கேட்கும் பொதுத்துறை வங்கி நிர்வாகங்கள், எந்த ஆவணமுமே இல்லாமல் வெற்றுப் படிவத்தில் போடப்பட்டிருந்த விவசாயிகளின் கையெழுத்துகளை மட்டும் வைத்துக் கொண்டு எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ரூ.450 கோடி கடனை வாரி வழங்கின? என்பது தெரியவில்லை. விவசாயிகளுக்குத் தான் கடன் வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் கடன் தொகையை, விவசாயிகளிடம் வழங்காமல் சர்க்கரை ஆலைகளிடம் வழங்கியது ஏன்? என்ற வினாவும் எழுகிறது. இந்த வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) மாற்ற வேண்டும்.

 

ஒரு காலத்தில் நேர்மையான நிறுவனமாக செயல்பட்டு வந்த திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் இப்போது மோசடிகளின் மொத்த உருவமாக மாறியிருக்கிறது. உழவர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட  கரும்புக்கு உரிய தொகையை வழங்காமல் பாக்கி வைப்பது மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு வழங்கப் பட வேண்டிய வெட்டுக் கூலியை முடக்கி வைப்பது, ஆலை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  ஊதியத்தை வழங்க மறுப்பது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை ஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் செய்துள்ளது.

 

இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆலை நிர்வாகம் மீது பல நேரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காததற்காக இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை, திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகியவற்றின் சர்க்கரைக் கிடங்குகளை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக ரசு மூடி முத்திரையிட்டது. ஆனால், அதன் பிறகும் திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனம் திருந்தவில்லை என்பதையே ரூ.450 கோடி மோசடி காட்டுகிறது.

 

உழவர்களுக்கு துரோகம் இழைத்து அவர்களின் நம்பிக்கையை இழந்து விட்ட திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சர்க்கரை ஆலைகள் இனியும் பழைய நிர்வாகத்தில் இயங்குவது சரியல்ல. அது மேலும் மேலும் ஊழல்களும், மோசடிகளும் நடப்பதற்கு மட்டும் தான் வழி வகுக்கும். எனவே,  திருஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் அனைத்து சர்க்கரை ஆலைகளையும் அரசுடைமைக்கி தமிழக அரசே நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, விவசாயிகள் பெயரில் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் ஆலை உரிமையாளரின் பெயருக்கு மாற்றி, அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடன் வசூல் என்ற பெயரில் உழவர்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இந்த மோசடியில் பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளின் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’