Skip to main content

கடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன்! பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

 

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கடுமையாக விமர்சித்தார்.  அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குநர் சேரனின் நிலையை நினைத்து வேதனைப்பட்டார்.

 

அவர், ’’நான் பார்த்த வரையில் சமீபத்தில் எனக்கு ரொம்ப மனவேதனையை கொடுத்த நிகழ்வு என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் அழுததுதான்.  நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை.  பார்க்கவும் மாட்டேன்.  அந்த நிகழ்ச்சியால் சமூகத்திற்கு எந்தப்பலனும் இல்லை.  

 

சேரன் பங்கேற்று பிரச்சனை வந்தபோது என்னிடம் அந்த வீடியோவை காட்டினார்கள்.   

 

ameer

 

நானும், பாலாவும் உதவி இயக்குநராக இருந்தபோது பார்சன் காம்ப்ளக்சில் இருந்தோம்.   சிறிய அறை என்பதால் வளாகத் தில் உள்ள கோவில் வாசலில் பெரும்பான்மையான நேரங்கள் படுத்துக்கிடப்பேன்.   அப்போது பொற்காலம் ரிலீசான நேரம்.  பாரதிராஜாவை பார்க்க பொக்கேவுடன் காரில் இருந்து இறங்கி கம்பீரமாக சென்றார் சேரன்.    அதன்பின்னர், நான்  கடன் வாங்கி ராம் படத்தை எ டுத்துக்கொண்டிருந்தேன்.  அப்படி இருந்தும், 25 ஆயிரம், 50 ஆயிரம் என்று கடன் வாங்கி ராம் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது,  ஆட்டோகிராப் படத்தை எடுத்து முடித்திருந்த சேரன், விழாவில் பேசும்போது, எத்தனை கையெழுத்துதான் போடுவது என்று தனக்கு இருக்கும் கடன் பிரச்சனையை சொல்லி மேடையிலேயே அழுதார்.   அவர் மேடையை விட்டு இறங்கியதும், கையை பிடித்துக்கொண்டு, நான் வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் தரட்டுமா? என்று கேட்டேன்.  வேண்டாம்...தேவைப்பட்டால் கேட்டு வாங்கிக்கிறேன் என்று சொன்னார்.  

 

ஆட்டோகிராப் வெற்றி நினைத்து பார்க்கமுடியாத வெற்றி.  அந்த வெற்றி அவர் வாழ்க்கையை புரட்டி போட்டது.   அதன் பின்னர் லயோலா கல்லூரியில் பச்சை மனிதன் திரைப்பட விழாவிற்கு காரில் இருந்து இறங்கி நடந்து வந்தார்.   அவர் மேடைக்கு வரும் வரைக்கும்  இந்த பக்கம் ஆயிரம் பேர், அந்த பக்கம் ஆயிரம் பேர் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள்.   அதைப்பார்த்து பிரமித்தேன்.  

 

அவர் அலுவலத்திற்கு சென்றாலும் பிரமிப்பேன்.  பிலிம்பேர் விருதுகள், தேசிய விருதுகள், மாநில விருதுகள் என்று குவிந்து கிடக்கும்.    அப்படிப்பட்ட சேரன் பிக்பாஸுக்கு சென்றார்.   போவதுமுடிவெடுத்துவிட்டு முதல் நாள் சொல்லிக்கொண்டு போனார்.  அந்த நேரத்தில் என்ன சொல்வது. சரி, என்று சொல்லிவிட்டேன்.

 

அந்த நிகழ்ச்சியில், ஒரு பெண் தன்னை கையை பிடித்து இழுத்துவிட்டதாக புகார் கூறுவதையும், அதற்காக மனம் நொந்து, நான் எதற்காக இங்கே வந்தேன்... என் பிள்ளைகளுக்காகத்தான் வந்தேன்.. என்று அழுதபோது எனக்கு வேதனையாக இருந்தது.    அப்போது எனக்கு வந்த ஆத்திரத்திற்கு  நேரே அந்த ஸ்டூடியோவுக்கு சென்று உடைத்துக்கொண்டு போய் சேரனை தூக்கிட்டு வந்திடலாம் என்று தோணுது.   சமூகம் அவருக்கு கொடுத்திருக்கும் இடம்  சாதாரணது கிடையாது.   ஒரு முதல்வரை கடத்திக்கொண்டு போய் விவசாயம் பார்க்க வைத்ததாக தமிழ்சினிமாவில் வந்த முதல் கதை தேசியகீதம் படம்தான்.   அப்படிப்பட்ட இயக்குநர் இப்படிப்போய் உட்கார்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு.   சினிமாவில் புகழ் வெளிச்சம், எதுவும் நிரந்தமில்லை’’என்று தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“எப்போது அழைத்தாலும் விசாரணைக்குத் தயார்” - அமீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
ameer about producer dmk jaffer sadiq issue

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாத 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான அமீர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22 ஆம் தேதி நான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமே” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத் தெளிவாக விளக்கிய பிறகும், என் மீது பேரன்பு கொண்ட சில ஊடகவியலாளர்களும் நண்பர்களும் சமூக வலைதளப் பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலோடு என்னை தொடர்புப்படுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் மார்க்கத்தையும் கும்பிடக் கூடியவன் நான். அப்படி இருக்கையில் இதுபோன்ற ஒரு குற்றச்செயலில் என்னை தொடர்புப்படுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர அல்லது என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேற எந்த பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது. நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இறைவன் மிகப் பெரியவன்” எனப் பேசியுள்ளார்.