Skip to main content

மேம்பாலம் கட்டுமான பணி; தற்காலிக பேருந்து நிறுத்தம் கோரும் மக்கள்  

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

ambur bus stand near highway fly over bridge people asked temporary bus stop 

 

சென்னை - பெங்களூரு தேசிய தங்க நாற்கர சாலை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் வழியாகச் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே ஆம்பூர் பேருந்து நிலையம் இருப்பதால் பேருந்துகள் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதும், இறக்கி விடுவதுமாக உள்ளன. இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதிகப் போக்குவரத்தால் நகரப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து வந்தனர்.

 

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் மாநில அமைப்பாளருமான கதிர் ஆனந்த், தேர்தல் நேரத்தில் பொதுமக்களுக்கு தந்த தேர்தல் வாக்குறுதியின்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் முறையிட்டு போராடி மேம்பாலம் அமைப்பதற்கான உத்தரவினையும், நிதியினையும் பெற்றார். தற்போது ராஜீவ் காந்தி சிலை முதல் கஸ்பா பகுதி வரை சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டுமான பணி சாலையின் நடுவே பில்லர் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

 

பெங்களூர், கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றிக்கொண்டும் செல்கின்றன. சென்னை, வேலூரிலிருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குச் செல்ல முடியாத நிலையில் சாலையின் நடுவே சென்டர் மீடியன் தடுப்பு இருப்பதால் சாலையின் ஓரம் நின்றே பயணிகளை இறக்கி ஏற்றிச் சென்றன. அது பேருந்து நிலையத்துக்கு எதிரே நடந்ததால் பேருந்து நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு வெளிச்சம் இருட்டை பகலாக்கின, இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருந்தனர்.

 

ambur bus stand near highway fly over bridge people asked temporary bus stop 

இப்போது மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் சென்னை டூ பெங்களுரூ மார்க்கத்தில் பேருந்து நிற்கும் பகுதியாக ரயில் நிலைய நுழைவாயில் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு மின்விளக்கு வசதியே இல்லை. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட கழிவறை பல ஆண்டுகள் ஆகியும் மூடியே வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவசரத்துக்கு கூட சிறுநீர் கழிக்க முடிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருட்டில் பயந்து கொண்டு அந்த இடத்தில் நிற்கின்றனர். இந்த மேம்பால வேலை முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும். அதனால் பேருந்து நிறுத்தத்தை அதே மார்க்கத்தில் ரயில் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தள்ளி இந்து மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே காலியிடம் உள்ளது. அந்த இடத்தில் தற்காலிக பேருந்து நிறுத்தமாக உருவாக்கி மின்விளக்கு, குடிதண்ணீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்தடுத்து நடந்த கொடூர விபத்து; ஒருவர் மரணம், 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
back-to-back car accident near Ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஏலகிரி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஏலகிரி பகுதியைச் சேர்ந்த திலகம்(60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கணவர் வெங்கட்ராமன்(67) மற்றும் மகன் பிரகதீஸ்வரன்(35) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைப் பின் தொடர்ந்து வந்த தனியார் பேருந்து சாலையில் நின்றதால் அதனைக் கவனிக்காமல் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொள்ள சென்ற மற்றொரு தனியார் மினி வேன், ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் மினி வேனில் பயணம் செய்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனம் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறயினர் போக்குவரத்தை சீர் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கார் விபத்தில் இறந்த திலகம் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 ஏழு பேருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு. மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ரத யாத்திரை; ஈசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Ratha Yatra Heavy traffic in ECR

ரத யாத்திரையால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 44வது ஆண்டு விழாவாகப் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (07.07.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 03.30 மணி அளவில் பலவாக்கத்தில் ரத யாத்திரை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரைந்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகப்படியான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கிழக்கு கடற்கரைச் சாலை கடும் போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.