
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி பகுதியில் சாகுபடி செய்துள்ள கரும்புகள் முதிர்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரும்பு அரவையை, விரைவில் துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்க்கரை ஆலைகளுக்காக பயிரிடப்பட்ட கரும்புகள் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் வெட்டுவது வழக்கம். ஆனால் கரும்பு நிலுவைத்தொகை, ஊழியர்களின் சம்பள பாக்கி என பல்வேறு காரணங்களால் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை, சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலைகள் அரவை தொடங்கவில்லை. தாமதமாகி வருகின்றன. ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர. அரவை துவங்காததால் சாகுபடி செய்துள்ள கரும்புகள் பூக்க தொடங்கி உள்ளன. இதனால் வளர்ச்சி அடைந்த கரும்பு சர்க்கரை திறன் குறைந்து உட்புறம் பஞ்சு போன்று மாறத் துவங்கும். இதனால் அவற்றின் எடை வெகுவாக குறையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரவை பணியை விரைந்து துவக்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலுவைத் தொகை வழங்காததால் தற்போது கரும்பு வெட்டுவதும், இதுவரை நடைபெற முடியாமல் உள்ளதால், கரும்பு முதிர்ச்சி அடைந்து பூ பூத்துள்ளது. சுமார் 15 கோடி ரூபாய் நிலுவை தொகை பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக விவசாயிகள் சார்பில் ஆலை நிர்வாகம் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

மேலும் 2017_ 18 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு அறிவித்த 42 கோடி ரூபாயை ஓராண்டாகியும் வழங்கவில்லை. அந்த பாக்கியையும் வட்டியுடன் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த வட்டித் தொகையை விவசாயிகளுக்கு அம்பிகா சர்க்கரை ஆலை வழங்காததால் சலுகையையும் பெறமுடியாத நிலைக்கு, ஆலை நிர்வாகத்தால், விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்களுக்கு உரிய நேரத்தில் வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரும்பு முதிர்ச்சி அடைந்த நிலையில் கரும்புகளை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்ப மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.