/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cd-ambedkar-statue-vck-pro-art.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த சிலையில் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சிதம்பரம் பகுதியில் அரசியல் கட்சியின் கொடி கம்பங்களை நீதிமன்ற உத்தரவின் படி அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அம்பேத்கர் சிலைக்கு அருகே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற இன்று (05.06.2025) நெடுஞ்சாலை துறையினர் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் கொடிக்கம்பத்தை நாங்களே அகற்றிக் கொள்கிறோம். கொடிக்கம்பம் அதிக உயரம் கொண்டதால் அகற்றுவதில் சிரமம் ஏற்படும் என கூறியுள்ளனர். அதற்கு சிதம்பரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரணிதரன் உடனடியாக அகற்ற வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோடி கம்பத்தை அகற்றும்போது கொடி கம்பம் சிலையின் மீது விழுந்து சிலையின் தலை சேதமானது.
இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலையின் அருகே சிதம்பரம் கடலூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அதே இடத்தில் ஒன்று கூடி அம்பேத்கர் சிலை இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பியதால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், “நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிதரன் சாதிய கண்ணோட்டத்தோடு சிதம்பரம் நகரத்தில் உள்ள அருந்ததியர்கள் செருப்பு தைக்கும் கடையை பொக்லைன் இயந்திரம் மூலம் தூக்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் வைத்துள்ளார். இந்த கடைகள் மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது தற்போது 30க்கும் மேற்பட்ட அருந்ததிய சமூக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அதே நேரத்தில் தற்போது கொடி கம்பத்தை தாங்களே அகற்றிக் கொள்கிறோம் என எவ்வளவோ கூரியும் அவர் கேட்காமல் இதுபோன்று சிலையை உடைத்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இதே இடத்தில் வெண்கல சிலையை நிறுவ வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)