Skip to main content

அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கக் கூடாது... கலவரமாகிக் கிடக்கும் மயிலாடுதுறை!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Ambedkar memorial day problem in mayladudhurai

 

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 65வது நினைவுதினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர்.

 

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் அம்பேத்கர் உருவப் படத்தை வைத்து மரியாதை செய்துவருகின்றனர். தலைஞாயிறை அடுத்துள்ள பட்டவர்த்தி கடைவீதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் அம்பேத்கர் உருவப் படத்தை வைத்து மாலை அணிவிக்க அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

Ambedkar memorial day problem in mayladudhurai

 

அங்கு அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க மாட்டோம் என அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட, மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

இதற்கிடையில், பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க வி.சி.க. கட்சியினர் சென்றபோது, மற்றொரு பகுதியில் குழுமியிருந்த மற்றொரு சமூகத்தினர் கல், கழி, கம்புகளை வீசி கலவரமாக்கினர். இதில் நான்கு பேருக்கு மேல் காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர், இதனால் அந்தப் பகுதியே பதற்றச் சூழலுக்கு உள்ளானது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.