
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மொழிப்புல முதல்வர் முத்துராமன் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் விழாவைத் துவக்கி வைத்துப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிப் பேசுகையில், ''இந்த பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்காக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தைச் சிதம்பரத்தில் தான் அமைக்க வேண்டும் என்று 1933-ஆம் ஆண்டு அப்போது சட்ட மேலவை உறுப்பினராக இருந்த சுவாமி சகஜானந்தா, பல்கலைக்கழகம் அமைக்க இடத்தை பார்வையிட வந்த குழுவினரிடம் வலியுறுத்தியதன் பேரில் இங்கு தமிழுக்காக இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ''அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் அமைக்கும் அமர்வுக்கு வருவதற்கு பல்வேறு போராட்டங்களையும் இன்னல்களையும் கடந்து வந்துள்ளார். எதுவுமே எளிதாக கிடைத்துவிடவில்லை. அப்படி வந்தவர் அமர்வுக்குத் தலைவரானார். உலகத்திலே மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்து வழங்கியுள்ளார். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி வழங்கிய இந்த நாளை போற்றி உறுதியேற்போம்'' என அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன், பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய முதல்வர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைக்கு எவ்வாறு குரல் கொடுத்துள்ளார் என்பதை விளக்கிப் பேசினார்கள்.
பல்கலைக்கழக அம்பேத்கர் இருக்கையின் சார்பில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்-2021 தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டி போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் சௌந்தரராஜன் ,துணை பேராசிரியை.ராதிகாராணி செய்திருந்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழக புல முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)