/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/107_59.jpg)
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதில் ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் பின்னர் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வைத் தொடங்கிய நிலையில் தற்போது 10ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே முதல் 2 கட்ட அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும், அதனை வெளியிடாமல், நிறுத்தி வைத்திருந்த இந்தியத் தொல்லியல் துறை அண்மையில், கீழடி முதல் 2 கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யுமாறு கடிதம் எழுதியிருந்தது.
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது, ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்தியத் தொல்லியல்துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார். அறிக்கை சமர்ப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ள என்ன காரணம்? என்று தமிழ் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் முதல்வர் ஸ்டாலின் என பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவந்த அமர்நாத் ராமகிருஷ்ணனை நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அமர்நாத் ராமகிருஷ்ணன் வசம் இருந்த துறை எச்.ஏ.நாயக்கிடம் வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)