Skip to main content

மேலும் ஒரு வழக்கில் சிக்கிய அமர் பிரசாத் ரெட்டி

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

 Amar Prasad Reddy who was involved in another case

 

பா.ஜ.க. பிரமுகரான அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அண்மையில் சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி கடந்த 22 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்நிலையில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

 

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின் போது தமிழக முதல்வர் புகைப்படத்தை அகற்றிவிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியதாகப் புகார் எழுந்திருந்தது. அந்தப் புகாரின் பேரில் தற்போது கோட்டூர்புரம் போலீசார் அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.