Skip to main content

சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை! மருத்துவமனைக்கே சென்று பள்ளி தாளாளருக்கு 15 நாள் காவல் விதித்த நீதிபதி!   

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Amala corespondent arrested

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விராரெட்டிகுப்பம் கிராமத்தில் அமலா சிறுவர்-சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

 

இங்கு தங்கியிருந்த மூன்று மாணவிகள் காணாமல் போனதாக அப்பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ்ராஜா அக்டோபர் 25-ஆம் தேதி ஆலடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமிகளை தேடி கண்டுபிடித்து, சிறுமிகளை கடலூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (போக்ஸோ) ஆஜர்படுத்தினர். அப்போது அந்த சிறுமிகளிடம் நீதிபதி எழிலரசி விசாரணை மேற்கொண்டார்.  

 

விசாரணையில் பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா, மூன்று சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். அதையடுத்து 10.11.2021 அன்று ஜேசுதாஸ்ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அமலா சிறுவர் சிறுவர் சிறுமியர் இல்லத்தில் இருந்த 40 பேரும் கடலூர் அரசு சிறுமியர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அதன் பின்னர் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார் அமலா பள்ளிக்கு சென்று ஆவணங்களை ஆய்வு செய்தனர். அந்த இல்லத்தில் 198 மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். அதில் 67 பெண்கள், 136 ஆண்கள் இருந்தனர். அவர்களுக்கு அட்மிஷன் போடப்பட்ட விவரம், வெளியே அனுப்பிய விவரங்களை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். அதில் மாணவர்கள் அட்மிஷன் போடப்பட்ட விவரங்கள் சரியாக இருந்தன. ஆனால் அவர்களை வெளியே அனுப்பிய விவரம் சரியாக இல்லை. தற்போது உள்ள 29 மாணவர்களின் விவரங்களையும் சோதனை செய்தார். மூத்த குடிமக்கள் 9 பேர் தங்கியுள்ள இல்லத்தைப் பார்வையிட்டு அவர்களின் ஆவணங்களை சரிபார்த்தார். அதிலும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சிறுவர்-சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.  


இந்நிலையில் ஜேசுதாஸ்ராஜாவுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் கைதான அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் ஜேசுதாஸ் ராஜாவை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியவில்லை. அதையடுத்து கடலூர் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி நேற்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சையிலிருந்த ஜேசுதாஸ் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்