திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கு உட்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகள் திருச்சி மாவட்டத்தில் 8 கல்லூரியும் புதுக்கோட்டையில் ஒரு கல்லூரியும் மொத்தம் 9 கல்லூரிகள் உள்ளன. இக் கல்லூரிகளில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட ஊதிய விகிதம் தொடர்பான கோப்புகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருச்சி RJD அலுவலகத்திற்குக் கல்லூரிகள் முன்மொழிவுகளை அனுப்பி வைத்துள்ளன.

இந்தக் கோப்புகளில் பல கோப்புகள் OC என்னும் அலுவலக நகலில் கையொப்பம் பெறப்பட்டுள்ளன. FC எனப்படும் உண்மை நகல் கையொப்பமிடப்படாமல் கடந்த 2 மாதங்களாக RJD அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஓய்வூதியம் பெறாமலும், ஓய்வூதியப் பலன்கள் தலா ஒரு ஆசிரியருக்கு 30 – 50 இலட்சம் வரை கிடைக்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தனித்தனியாக கோப்புகளின் நிலவரங்களை அறிந்து வர RJD அலுவலகம் சென்றால் இணைஇயக்குநரைப் பார்க்கச் சென்றால், “நான் ரொம்ப பிசி…. உதவி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் கணக்கு அலுவரைப் பாருங்கள்” என்றே பதில் வரும். கணக்கு அலுவலர் இரண்டு நாளில் கோப்புகள் கையெழுத்தாகிவிடும் என்று சொல்லி அனுப்பி வைப்பார். இதுநாள் வரை கோப்புகள் கையெழுத்திடப்படாமலே உள்ளன.
இந்நிலையில், இன்று (18.01.2018) பிற்பகல் 2.00 மணிக்கு ஓய்வுப் பெற்ற கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர் பெலிசியா செல்வராணி தலைமையில், RJD அவர்களை நேரில் சந்தித்து முறையீடு செய்வதென சுமார் 20 ஆசிரியர்கள் RJD அலுவலகம் சென்றனர். RJD அவர்கள் வழக்கம்போல் கணக்கு அலுவரைச் சந்தியுங்கள். என்னைச் சந்திக்கவேண்டாம் என்று கூறியதாக அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 2.30 மணியளவில் பேராசிரியர் பெலிசியா செல்வராணி தலைமையில் கணக்கு அலுவலருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது கணக்கு அலுவலர் தெரிவித்த விவரங்கள் “இணைஇயக்குநர் வேறுபணியாக வெளியே சென்றுள்ளார்கள். ஓய்வூதியம் தொடர்பான அனைத்துக் கோப்புகளிலும் திங்கட்கிழமை கையொப்பம் வாங்கித் தருவாக” உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஓய்வுப் பெற்ற ஆசிரியர்கள் இணை இயக்குநரிடம் வழங்கக் கொண்டுவந்த முறையீட்டு மனுவைக் கணக்கு அலுவலர் பெற்றுக்கொண்டு, இணை இயக்குநர் பார்வைக்கு வைப்பதாகவும் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் பெலிசியா செல்வராணி, “தமிழ்நாட்டில் உள்ள அனைதது மண்டலங்களிலும் 7 ஆவது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஓய்வூதியம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. திருச்சி மண்டலத்தில் மட்டும் புதிய ஓய்வூதியம் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகின்றது. இது ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் வாழ்வாரத்தைப் பாதிக்கும் செயல். இணைஇயக்குநர் உடனே கோப்புகளில் கையொப்பமிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
முறையீடு செய்யும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் பேசும்போது, “எதிர்வரும் 23ஆம் தேதி வரை திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கையொப்பமிடுகிறார்களா? என்று பொறுத்திருப்போம். கையொப்பமிடாத நிலை நீடித்தால், சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநரைப் பணியிடமாற்றம் செய்யும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.