Skip to main content

காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரிகள் அமைக்க அனுமதிப்பதா? ஆணையை ரத்து செய்யுங்கள்” - அன்புமணி 

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Allowing quarries near reserve forests? Cancel the decree” - Anbumani

 

“அண்மையில் தமிழ்நாட்டின் 17-ஆவது வனச்சரணாலயமாக அறிவிக்கப்பட்ட காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் ஒரு காப்புக்காடு தான். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள 686.406 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்தக் காப்புக்காடுகளில் யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.  புலிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டிகளுக்கும், 238 வகையான பறவைகளுக்கும் புகலிடமாக திகழும் இந்த காப்புக்காடுகளையொட்டி கல்குவாரிகள் அமைக்கப்பட்டால் அதில் உள்ள விலங்குகளில் நிலை என்னவாகும்” என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

மேலும் அதில் அவர், “தமிழ்நாட்டில் காப்புக்காடுகளைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ. சுற்றளவில் கல் குவாரிகள் மற்றும் சுரங்கங்களை அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசின் தொழில்துறை ஆணையிட்டிருக்கிறது. குவாரி உரிமையாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை பலி கொடுக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதை ஏற்க முடியாது; இது கண்டிக்கத்தக்கது.

 

தமிழ்நாடு அரசின் தொழில்துறை இது தொடர்பாக பிறப்பித்திருக்கும் டிசம்பர் 14-ஆம் தேதியிட்ட அரசாணையில், “கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதியன்று தமிழக அரசின் தொழில் துறையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் இருந்த பல குவாரிகள் செயல்பட முடியாமல் இருந்தது அரசின் கவனத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடைபெற்ற சுரங்கத்துறை மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில், குவாரி, சுரங்கம் தோண்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது” என்று  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது; இயற்கையை அழிக்கக் கூடியது.

 

காப்புக்காடுகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த வகையான குவாரிகளையும், சுரங்கப் பணிகளையும் அமைக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே அரசு தான் ஆணை பிறப்பித்தது. காப்புக்காடுகளையொட்டிய பகுதிகளில் குவாரிகள் செயல்பட்டு வருவது அப்போது அரசுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், தடை விதிக்கப்பட்டதன் நோக்கம் காப்புக்காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்  தான். ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பதைப் பார்க்கும் போது, இயற்கை வளம், சுற்றுச்சூழல் மீது அரசுக்கு ஆர்வம் இல்லையோ? எனத் தோன்றுகிறது.

 

அதுவும் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டதற்காக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கும் காரணம் மிகவும் வினோதமானது. தடை விதிக்கப்பட்ட ஒரு கி.மீ பகுதியில் செயல்படாமல் முடங்கி விட்ட குவாரி உரிமையாளர்களின் விருப்பத்தையும், அரசுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தையும் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இயற்கை வளம், சுற்றுச்சூழல், வனவிலங்குகளின் பாதுகாப்பு ஆகியவற்றை விட அரசுக்கு கிடைக்கும் வருமானமும், கல்குவாரி உரிமையாளர்களின் நலனும் தான் முக்கியமா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

 

காப்புக்காடுகளாக இருந்தாலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தாலும் அதைச் சுற்றியுள்ள  ஒரு குறிப்பிட்ட தொலைவு, வெளிப்புற சக்திகளின் எதிர்மறையான அழுத்தங்களில் இருந்து வனத்தை காப்பதற்கான இடை மண்டலமாக (Buffer Zones)  அறிவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு வலியுறுத்துகிறது. இதே நோக்கத்தை உச்சநீதிமன்றமும் பல தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கிறது. ஐ.நா. அமைப்பும், உச்சநீதிமன்றமும் எந்த நோக்கத்திற்காக இதை வலியுறுத்துகின்றனவோ, அதே நோக்கத்திற்காகத் தான் தமிழ்நாடு அரசும் காப்புக்காடுகளை சுற்றி குவாரிகளையும், சுரங்கங்களையும் அமைக்க தடை விதித்தது. அது உன்னதமாக நடவடிக்கை. ஆனால், அந்த உன்னத நடவடிக்கையை எடுத்த தமிழக அரசே அதை சிதைக்கத் துடிப்பது மிகவும் பிற்போக்கான செயல் ஆகும். இது சரியல்ல.

 

தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையில் இருந்து ஒரு கிமீ தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்றும் அதே அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும், காப்புக்காடுகளும் வெவ்வேறு வகையானவை என்றாலும், அவை இரண்டுக்குமான வித்தியாசங்கள் குறைந்து வருகின்றன. காப்புக்காடுகளிலும் யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிகம் வாழ்கின்றன.

 

அண்மையில் தமிழ்நாட்டின் 17-ஆவது வனச்சரணாலயமாக அறிவிக்கப்பட்ட காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் ஒரு காப்புக்காடு தான். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள 686.406 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்தக் காப்புக்காடுகளில் யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன.  புலிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டிகளுக்கும், 238 வகையான பறவைகளுக்கும் புகலிடமாக திகழும் இந்த காப்புக்காடுகளையொட்டி கல்குவாரிகள் அமைக்கப்பட்டால் அதில் உள்ள விலங்குகளில் நிலை என்னவாகும்? ஏற்கனவே யானைகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் காடுகளில் இருந்து வெளியேறி ஊர்களுக்குள் நுழைவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 பேர் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கின்றனர். தமிழக அரசின் ஆணை நடைமுறைக்கு வந்தால் மனித - விலங்குகள் மோதலும், உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

 

ஒரு மாநில அரசின் முதன்மையான நோக்கம் இயற்கையையும், மக்களையும் காப்பதாகத் தான் இருக்க வேண்டும். வளங்களை பறிகொடுத்து அரசின் வருவாயை பெருக்கவும், கல் குவாரிகளின் நலன்களை காக்கவும் எந்தத் தேவையும் இல்லை. எனவே, காப்புக்காடுகளைச் சுற்றி கல்குவாரிகள், சுரங்கங்களை அமைக்க அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட ஆணையை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.