ADVERTISEMENT

“உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

06:24 PM Aug 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது தான் வரலாற்றுச் சிறப்புமிக்க 'இருமொழிக் கொள்கை’ தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, துறைகளிலும் தமிழின் பல பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், காலத்துக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழைச் சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காகத் தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாகத் தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில மற்றும் ஒன்றியச் சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளைத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தவர் கலைஞர். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிவரும் இந்தத் தருணத்தில் தமிழைச் சட்ட ஆட்சி மொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாகச் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து அவற்றைப் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களது பயன்பாட்டிற்காகக் கொண்டுசெல்ல வேண்டும் என்று கலைஞரின் வழிநடக்கும் அரசு முடிவு செய்துள்ளது.

இப்பணிக்காக மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக 3 கோடி ரூபாயும், பின்னர் தேவைக்கேற்பவும் நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். “தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே" என்று பாவேந்தர் காட்டிய வழியில் செம்மொழித் தமிழுக்குச் சட்டத்துறையிலும் உரிய இடத்தைப் பெற்றுத் தருவோம்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT