
பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இலையில் நேற்று பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் மாளிகை செலவுகளுக்காக மாநில அரசு ஒதுக்கிய நிதி, அட்சய பாத்திரம் திட்டத்திற்கும் கண்ணுக்குத் தெரியாத வேறு ஒரு வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு வரை ஆளுநர் மாளிகை செலவினங்களுக்காக மாநில அரசு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. அதற்குப் பிறகு அந்த தொகை திடீரென ஐந்து கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு கோடி ரூபாய் அரசு பள்ளிகளில் காலை உணவு சேவையை செயல்படுத்தும் அட்சய பாத்திரம் திட்டத்திற்காக தனியார் அமைப்புக்கும், மீதம் உள்ள ஒரு கோடி ரூபாய் கண்ணுக்குத் தெரியாத வேற ஒரு கணக்குக்கும் மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டும் அதே அமைப்பிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. நான்கு கோடி ரூபாய் கண்ணுக்குத் தெரியாத வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.