allocating battery torch light logo to MNM party! - Election Commission ordered to respond!

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு,கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்,வரவிருக்கும் தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இந்தச் சின்னம் ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி, கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளரான, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில்,‘கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு,மக்கள் நீதி மய்யம் கட்சி, மக்களைச் சந்தித்து வந்துள்ளது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,தமிழகத்தில் இந்த முறை அந்தச் சின்னம், எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.

எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்குபேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தச் சின்னத்தை பயன்படுத்த,அக்கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும். தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுப்படி, பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் நீதி மய்யம் கட்சி தரப்பில்,‘தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு,இரு தேர்தல்களில் பொதுச் சின்னம் ஒதுக்கப்பட வேண்டும்.அந்த வகையில்,லோக்சபா தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிரச்சாரம் துவங்கியுள்ள நிலையில், அந்தச் சின்னத்தையே ஒதுக்கக் கோரிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. மனு குறித்து தேர்தல் ஆணையத்தின் கருத்துகளைப் பெற அவகாசம் வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.