Advertisment

காவிரிக்காக அனைத்து கட்சி கூட்டம் அரசியல் நாகரீகத்தின் மறுமலர்ச்சி : கொ.ம.தே.க. ஈஸ்வரன்

eswaran

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் பற்றி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது...

’’காவிரி நதிநீர் உரிமைக்காக தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டம் காலத்தின் தேவை என்றாலும் இது ஒரு வரலாற்று நிகழ்வு. கர்நாடகாவில் அனைத்துக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு எதிரான சதி திட்டங்களை தீட்டி அதன் மூலம் வெற்றி கண்டு கொண்டிருக்கும் போது தமிழகம் ஏமாறுகிறதா என்ற ஐயப்பாடு ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமாக இருந்தது. தமிழக முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் ஒருசேர முடிவு எடுத்து தமிழகத்தின் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை அழைத்து காவிரி நதிநீர் உரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதும், அதில் நாங்களும் கலந்து கொண்டு எங்களது கருத்துக்களை தெரிவித்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.

காவிரி நீர் உரிமைக்காக மொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்ற செய்தியை இந்த நாட்டுக்கு இன்றைய கூட்டம் பிரகடனப்படுத்தி இருக்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அரசியல் நோக்கத்திற்காக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்ற காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு இப்போது மட்டும் தீர்ப்புக்கு தலைவணங்குமா என்ற ஐயப்பாடு எழுப்பப்பட்டாலும், நம்முடைய காவிரி நீர் உரிமைகளை பெற எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.

Advertisment

இன்றைக்கு முதலமைச்சர் தலைமையில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம் அனைத்துக்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இனி தமிழர்களின் உரிமைகளுக்காக எந்தவொரு பொதுவான பிரச்சினைகளிலும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருப்பது தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடு. மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்கள் எந்த அளவுக்கு காவிரி நீர் விவகாரத்தில் பலனளிக்கும் என்று தெரியாது.

தமிழர்களுக்கு வரும் வயிற்று வலியை கர்நாடகா புரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை. அது அவர்களுக்கு வந்தால் தான் தெரியும். நீலகிரி மலையிலே உருவாகின்ற தண்ணீர் தான் மோயாற்றின் கிளை ஆறுகள் மற்றும் பல வாய்க்கால்களின் மூலமாக தமிழக எல்லையிலிருந்து கேரளாவுக்குள்ளும், கர்நாடகாவுக்குள்ளும் பயணிக்கிறது. அந்த நீர் தான் கர்நாடகத்தினுடைய விவசாய நிலங்களை பசுமையாக வைத்திருக்கிறது. தமிழக எல்லைக்கு உட்பட்டு நீலகிரி மலையில் உற்பத்தியாகின்ற தண்ணீரை தமிழக அரசு அணைக்கட்டி தடுத்து தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடும் முயற்சிகளை மேற்கொண்டால் காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா ஒத்துழைப்பு தர வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தின் முதலமைச்சரும், அமைச்சர்களும் எதிர்க்கட்சி தலைவரை பார்த்து புன்னகைக்க கூட கூடாது என்ற நிலை மாறி, இன்று சிரித்துப் பேசி கருத்துகளை பகிர்ந்துக்கொள்கின்ற விதம் தமிழக அரசியல் நாகரீகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது’’என ஈஸ்வரன் கூறியுள்ளார்.

CPM Eswaran Kaveri Meeting party Political Civilization Renaissance
இதையும் படியுங்கள்
Subscribe