வரும் ஏப்ரல் 15ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் எனவும், இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே திமுக, அதிமுக இடையே கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை போர் நடந்து வந்தது. அதிமுகவின் நடவடிக்கைகள் சிலவற்றையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்திருந்தார். இந்நிலையில் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.