
இந்தியா முழுவதும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளின் விலை 30சதவீதம் முதல் 40சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் ஏழைகளின் வீடு கட்டும் கனவு கனவாகவே உள்ளது. இதனால், கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, 'விவசாயத்திற்கு அடுத்தப்படியாக உள்ள கட்டுமானத் தொழிலைப் பாதுகாக்க அரசு கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தைத் திரும்பபெற வேண்டும்'. 'தொடர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'. 'சிமெண்ட் மற்றும் இரும்பு விலையை நிர்ணயிக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்'. 'செயற்கையாக சிமெண்ட் மற்றும் கம்பி விலையை உயர்த்தக் கூடாது' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்டுனர்கள், கட்டட வல்லுனர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், செயற்கையான விலை ஏற்றத்தைக் கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.