Advertisment

அனைத்து சமுதாயங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் -மருத்துவர் இராமதாஸ் உரை! 

All communities should be given reservation on the basis of population - Dr. Ramadass Speech!

Advertisment

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு 1986இல் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து பா.ம.க சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப்பட்டு கடந்த 11ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் இணைய வழியிலான கருத்தரங்குகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்எழுதிய 'சுக்கா...மிளகா...சமூகநீதி?' என்ற சமூகநீதி நூல் வெளியீட்டுவிழா கடலூரில் இன்று (17.09.2020 ) நடைபெற்றது.

இணையவழியில் மருத்துவர் இராமதாஸ்முன்னிலையில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவர் பேராசிரியர் தீரன் நூலை வெளியிட 1986 இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மார்பில் பாய்ந்த குண்டுகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தட்டானோடை செல்வராஜ் பெற்றுக்கொண்டார். சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம் வரவேற்புரையாற்றினார். வன்னியர் சங்கதலைவர் பு.தா.அருள்மொழி, மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், அசோக்குமார், வெளியீட்டாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நூல் வெளியீட்டு விழாவில் இணைய வழியில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி, சிறப்புரையாற்றினார்.

இணைய வழியில் உரையாற்றிய மருத்துவர் இராமதாஸ், "சமூகநீதி விஷயத்தில் எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறோம், எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இந்த புத்தகத்தை படித்த பிறகு தெரிந்து கொள்ளலாம். ‘சுக்கா...மிளகா... சமூகநீதி’ என்ற இந்த நூல் பைபிள், குரான், கீதை போன்ற நூல்களின் வரிசையில் போற்றப்பட வேண்டியது. இந்த நூல் சமூகநீதிக்கான கட்டற்ற கலைக்களஞ்சியமாக, அதாவது என்சைக்ளோபீடியாவாக திகழும். பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

Advertisment

பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக பெரும் தடையாக இருப்பது கிரீமிலேயர் முறை ஆகும். அது மிகப்பெரிய அநீதி, அக்கிரமம் ஆகும். கிரீமிலேயர் முறை முழுமையாக நீக்கப்பட வேண்டும். கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியமும் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுதரப்பில் கூறப்பட்டபோது, அதற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தது நான்தான்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக டெல்லியில் பல்வேறு போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது.

மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை எட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் மிகவும் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றன. சமநிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நமது நாட்டில் சமநிலையற்ற வளர்ச்சி தான் உள்ளது. சமூகநீதி இல்லாத வளர்ச்சிதான் நடைமுறையில் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சியில் 1931-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்காமல் வன்னியர்களின் வாழ்நிலையை உயர்த்த முடியாது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் சமுதாயங்கள் தவிர மீதமுள்ள 81% விழுக்காட்டில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஓர் ஆணையம் அமைத்து அறிக்கை பெற வேண்டும். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தனியார்த்துறை வேலைவாய்ப்பில் 80% தமிழர்களுக்கு வழங்க வகை செய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களில் சாதி அடிப்படையில் இடஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பிள்ளைகளுக்கு மட்டும் தான் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

வன்னியர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சமவாய்ப்பு ஆணையம் (Equal Opportunity Commission) என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் ஏராளமான சமுதாயங்கள் உள்ளன. அந்த சமுதாயங்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை அரசே அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான சமூகப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவையெல்லாம் நடக்க வேண்டுமானால் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்தியா விடுதலை அடைந்து 74 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்னும் முழுமையான சமூகநீதி கிடைக்கவில்லை. வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நான், மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதுகுறித்து இதுவரை அரசாங்கம் நம்மை அழைத்து பேசவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படி நாம் கேட்டுக் கொண்டே இருப்பது? தமிழ்நாட்டில் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். தமிழக மக்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். அதற்காக பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும்”என்று கூறினார்.

book launch Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe