Skip to main content

அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா? வேல்முருகன் கேள்வி

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், பேனர் கூடாது என்பதை அமல்படுத்திவரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க, சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா? அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

 

edappadi palanisamy narendra modi


 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

''யாருக்கும் எதற்கும் போஸ்டர், பேனர், கட்டவுட் பொது இடங்களில் வைக்கக் கூடாது என்னும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தமிழகமெங்கும்  அமல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. இந்நிலையில் சுபஸ்ரீ என்கின்ற கம்ப்யூட்டர் எஞ்சினியர் சென்னைப் புறநகர் ஒன்றில் பேனர் விழுந்து பலியானார். அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டுத் திருமணத்திற்காக வைத்த பேனர் அது. ஆனால் அந்த அதிமுக பிரமுகர் 10 நாட்களுக்கு மேலாகியும் கைது செய்யப்படவேயில்லை. இதனைத் தமிழகமே ஒருசேரக் கண்டித்தது. அதன் பின்னரே வேறு வழியின்றி அவர் கைதுசெய்யப்பட்டார்.


 

ஆனால் அவரைக் கைது செய்வதற்கு முன்பாகவே, “பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகைக்கு பேனர்கள் வைக்கக் கேட்க, ஒன்றிய அரசும் தமிழக அரசும் சேர்ந்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக” அறிவித்தன. அங்கு இவர்களின் மனு இன்று விசாரிக்கப்படுகிறது.
 

இந்த நிலையில் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் தாயாரே, “பேனர் கூடாது என்பதை அமல்படுத்திவரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க வேண்டி, நீதிமன்றத்திற்கே சென்று சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா? சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.


 

அவரது கேள்வி முற்றிலும் நியாயமானதே. இந்தக் கேள்வியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் எழுப்புகிறது. அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா என்று கேட்பதுடன், மோடிக்கு பேனர் வைக்க, ஒன்றிய அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் நீதிமன்றம் சென்றது, மோடியின் சர்வாதிகாரத்திற்கே துணைபோனதாகும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்.
 

எனவே சனநாயகத்திற்கு எதிரான அதிமுக அரசின் இந்த செயலைக் கண்டிப்பதுடன், அதனைக் கைவிடக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி''. இவ்வாறு கூறியுள்ளார். 


    

சார்ந்த செய்திகள்

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .

Next Story

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Important announcement released by the Department of Education on 5 consecutive days off for schools

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, தமிழக அரசு, தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தல் பணிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.