ADVERTISEMENT

தேர்தல் அறிக்கையின்படி மதுவிலக்கை ஏன் கொண்டுவரவில்லை? -ஆட்சியாளர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

12:44 PM Feb 28, 2020 | kalaimohan

தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் கடை இடமாற்றம் தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, அந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி கார்த்திகேயன் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது நீதிபதிகள், இந்தப் பிரச்சனை முழுக்க முழுக்க அரசியல் அமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சனை என்றும் மாநில அரசு ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அரசியலமைப்பு சட்டப்படி கிராம பஞ்சாயத்துகள் சமூக நலன் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏன் மாநில அரசு கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது? இதுதொடர்பாக ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது? என்று கேள்விகள் எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனத் தெரிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தபின்பு ஏன் அமல்படுத்துவதில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன்? அரசின் கொள்கை முடிவாக மதுபானக்கடை இருந்தாலும், மக்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாத்தியமான ஒன்றை வருவாயை மட்டும் கருதி சாத்தியமல்ல என அரசு தெரிவிக்கிறது. டாஸ்மாக் கடைகள் எங்கே அமைக்க வேண்டும் என விதிகள் இருந்தாலும், வருங்காலத் தலைமுறையினரின் நலன் கருதி சில விதிகளைக் கொண்டுவரலாம் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துக் கூட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படுவது இல்லை. அதனால், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கில், மதுக்கடைகள் அமைப்பது தொடர்பான டாஸ்மாக் நிறுவன சுற்றறிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசுதான் விதிகளைக் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை ஆறு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT