
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 7) வடகாடு கிராமத்தில் அவரது வீட்டில் வைத்தே ஒரு கும்பலால் வெட்டி சாயக்கப்பட்டார். கை துண்டானது. ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கார் ஓட்டுநரைக் காணவில்லை. இப்படிப்பல தடைகளைத் தாண்டி அவரது மகன் ராஜபாண்டியன் காரில் உயிருக்குப் போராடும் தந்தையை ஏற்றிக் கொண்டு துண்டான கையை காரின் முன்னால் வைத்துக் கொண்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரழந்தார்.
இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி பல நாட்கள் போக்குவரத்து முடக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து வடகாடு வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்போடு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இந்தக் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்ற ஆதங்கம்அவரது ஆதரவாளர்களிடம் இன்றளவும் உள்ளது.
அதன் பிறகு, அவரது நினைவு நாளை குருபூஜையாக முத்தரையர் மக்கள் கடந்த 9 வருடங்களாக அணுசரித்து வருகின்றனர். அமைசர்கள், தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் குருபூஜைக்கு தமிழகம் முழுவதும் இருந்து வெங்கடாசலம் ஆதரவாளர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதும் அன்னதானம் வழங்குவதும் வழக்கம்.

இந்த நிலையில் இன்று 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி நடத்த அவரது குடும்பத்தினர் அனுமதி கேட்டிருந்த நிலையில்,ஊரடங்கு அமலில்இருப்பதால் குடும்பத்தினர் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதியளித்தும் மற்றவர்கள் கூட்டம் கூட அனுமதி ரத்து செய்தும் ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி உத்தரவிட்டார். மேலும், திருச்சி சரக டி.ஐ.ஜி ஆணிவிஜயா, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பிற்காக சுமார் 300 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அஞ்சலியை தொடர்ந்து ஆலங்குடி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மதியம் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கம் கே.கே.செல்வகுமார் சுமார் 100 கார்கள், மோட்டார் சைக்கிள்களில் கோஷங்களுடன் கொடிப்பிடித்துக் கொண்டு சென்றனர். சில இடங்களில் செல்வகுமார் தரப்பினரை போலீசார் நிறுத்தி வாகனங்களில் கூட்டமாகச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள். ஆனால் தடையை மீறிச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தடையை மீறி வாகனங்களில் சென்றதால் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)