திமுகவைச் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமை கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை, கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் திமுக நிர்வாகிகள் பலரும் தங்கள் திருமண மண்டபம், ஹோட்டல்கள், விடுதிகள், வீடுகளையும் வழங்கியுள்ளனர். அந்த வரிசையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த மதனஞ்சேரி என்கிற கிராமத்தில் தளபதி அறிவாலயம் என்கிற பெயரில் 2006ல் கட்சி அலுவலகம் கட்டப்பட்டு, அதனை மறைந்த பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் திறந்து வைத்தார்.
கட்சி அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்த அந்த அலுவலகத்தை கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அந்த கட்டிடத்தை கட்டி பராமரித்து வரும் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன்அருளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த கட்டிடத்தில் 15 முதல் 20 பேர் தங்கவைத்து சிகிச்சை அளிக்கலாம். அதற்கான அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கிறது. அங்கு தங்கவைக்கப்படும் நோயாளிகளுக்கான உணவு தேவையையும் தானே ஏற்றுக்கொள்வதாக" குறிப்பிட்டுள்ளார். இதை மின்னஞ்சல் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பினார்.
அந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு மருத்துவமனையாக மாற்றும் பணியில் ஞானவேலன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.