/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a5407.jpg)
அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)