சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்ட நீதிபதியின் விசாரனைக்கு அஜித்குமாரின் அம்மா மாலதி ஆஜராகியிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நான் நடந்ததைச் சொல்லிருக்கிறேன். உண்மையைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். பையன் வேலைக்குப் போனது. அங்குக் கோவிலுக்கு வந்த 2 பெண்கள் தம்பியை (அஜீத்குமாரை) கார் பார்க் பண்ணச் சொன்னது. சாவியை எடுத்துக் கொடுத்தது. நகை 10 பவுன் காணோம் அப்படின்னு சொன்னார்கள் என்று கூறியதாகச் சொன்னேன். என் பையனைக் கூப்பிட்டுப் போய் ஆபீசில் வைத்து விசாரித்திருக்கிறார்கள். அவ்வாறு விசாரித்தபோது  நான் எடுக்கவில்லை என்று சொல்லிருக்கிறான்.

இவ்வாறு சொன்ன பிறகு போலீஸ் ஸ்டேசனுக்கு  போன் பண்ணி அங்க கூப்பிட்டு இருக்கிறார்கள். அப்போது இந்த சம்பவம் நடந்தது பற்றி எல்லாம் எதுவும் எனக்கு தெரியாது. தம்பி சின்னவன் (நவீன்குமார்) வேலைக்குப் போய்விட்டான். அவன் வந்த பிறகு இந்த மாதிரி நடந்துவிட்டது எனச் சொன்னேன். வாங்கம்மா போய் பாத்துட்டு வரலாம் அப்படின்னு சொல்லி நாங்கள் 2 பேரும் ஸ்டேஷனுக்கு போனோம். அதன்படி நானும் சின்ன பையனும் ஸ்டேஷனுக்கு போய் பார்த்தால் அஜீத்குமார் சட்டை இல்லாமல் பேண்ட் மட்டும் போட்டிருந்தான். நான், ‘தம்பி நகையை எடுத்துருந்தா கொடுத்துறியா நமக்கு வேண்டாம்’ என்று கூறினேன். இது நடந்தது வெள்ளிக்கிழமை சாயங்காலம். அப்போது அவன், “நான் நகையை எடுக்கவில்லை அம்மா” அப்படின்னு சொன்னான். அப்புறம் ஒரு சார் வந்து நீங்க வெளியில் போங்க அப்படின்னு சொல்லிவிட்டார். அதன் பின்னர் நாங்கள் இரண்டு பேரும் வந்துவிட்டோம்.

அப்புறம் தெரிந்த தம்பி ஒருவர், ‘சொன்னார் இல்லமா விசாரிக்கத்தான் கூட்டிட்டு வந்துருக்காங்க. விசாரித்து விட்டு விட்டுருவாங்க அம்மா. நீங்க வீட்டு போங்கன்னு சொன்னாங்க’. நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன். மறுநாள் காலையில் 3 போலீசார் வந்தபோது  சின்ன பையன் தூங்கிட்டு இருந்தான்.பீரோவில் இருந்த பொருட்களை எல்லாம் உதறி பாத்துட்டு உன் பையன் என்ன செஞ்சா தெரியுமா?. 10 பவுன் நகை காணாமல் போச்சு. எங்க வச்சு இருக்க என்று கேட்டார். அதற்குச்  சார் எனக்கு எதுவுமே தெரியாது. இந்த மாதிரி எடுத்துருக்கேன்னு சொன்னார்கள் அதெல்லாம் தெரியாது சார் அப்படின்னு சொன்னேன். இதனையடுத்து  சின்னவனை நீ வாடான்னு சொல்லிவிட்டு அவனை கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இது நடந்த போது காலை ஆறு, ஆறரை மணி இருக்கும்.

கூட்டிட்டு போனதுக்கு அப்புறம் எங்க அண்ணன் பையன் ஒரு பையன் இருக்கான். தம்பி என்னப்பா சின்னவனையும் கூட்டிட்டு போயிட்டாங்கன்னு கேட்டான். அதற்கு இரண்டு பேரையும் விசாரிப்பாங்கமா. அதன்பிறகு விசாரித்து விட்டு 10 ,11 மணி விட்டுருவாங்க அப்படி என்று சொன்னான். 12 மணி ஆயிற்று வரவில்லை. அப்புறம் திரும்ப போன் போட்டு கேக்குறேன். அப்பறம் ஒரு தம்பிக்கு போன் நம்பர் கொடுத்து நீங்க பேசுங்கள் பையனிடம் கேக்குறேன் தம்பி என்னயா சின்ன பையன்னு கூட்டிட்டு போயிட்டாங்க ஒரு விவரம் எனக்கு தெரியல என்று கேட்டேன். அதற்கு இல்லம்மா 6 மணிக்குள் விசாரித்துவிட்டு விட்டுருவாங்கன்னு சொன்னாங்க. மாலை 7 மணி சின்ன பையன் மட்டும் வந்தான். என்ன அண்ணனை காணோம் அப்படி என்று கேட்டேன். அண்ண சொல்ல முடியாதுமா அப்படின்னு சொன்னான்” எனத் தெரிவித்தார்.