சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றியவர் அஜித்குமார். தங்க நகை திருட்டு வழக்குத் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்பெஷல் டீம் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. அதில் “அஜித்குமாரை காவல் நிலையத்தில் வைத்து ஏன் விசாரணை நடத்தவில்லை?. வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது யார்?. ஏன் வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறீர்கள்?. 

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள் இருப்பதாக அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண கொலை வழக்கு போல் இல்லை. அஜித்குமார் கொடூரமாகக் கடுமையாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக இருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகமும் விடாமல் அஜித்குமார் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்திருக்கின்றன. அஜித்குமாரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அவரது இறப்பு வரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை” எனச் சரமாரி கேள்விகளால் காவல்துறையையும் அரசுத் தரப்பையும் துளைத்தெடுத்தது. அத்துடன், “யார் உத்தரவின் பேரில் சிறப்புப் படைப் புலனாய்வுக் குழு விசாரணை செய்தது என டி.ஜி.பி. பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள மடப்புரம் அருகே உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் உருவப் படத்திற்கு மலை தூவியும், மாலை அணிவித்தும்  மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து ஒரு  நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினார். அதோடு இந்த சம்பவம் குறித்து நடந்த சம்பவம் குறித்து அஜித்குமாரின் தம்பியான நவின்குமாரிடம் அஜித்குமாருக்கு என்ன நடந்தது?, போன்ற விவரங்களை எல்லாம் முழுமையாகக் கேட்டு அறிந்து கொண்டார்.