நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமார் வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளமுதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்  “மடப்புரம் கோவில் அலுவலகம் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் ஒழித்து வைத்திருப்பதாக கூறியதால் அங்கு சென்று நகைகளை தேடிய போது அஜித்குமார் அங்கு குவிந்து கிடந்த ஹாஸ்பிட்டாஸ் ஒவ்வொன்றையும் எடுத்து நகையை தேடிய போது கிடைக்கவில்லை.

உடனே போலிஸாரிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஓடிய போது கால் இடரி கீழே விழுந்தவரை மீண்டும் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கும் போது மற்ற விசாரணை நபர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நான் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நவின்குமார், அருண், தினகரன், லோகேஸ்வரன் ஆகியோர்களை டெம்போ மூலம் Gr1- 2517 அவர்களுடன் மாலை சுமார் 6 மணி அளவில் புறப்பட்டேன். அப்போது மேற்கண்ட அஜித்குமாரை HC- 760 பிரபு மற்றும் Gr1- 870 ஆனந்த். Gr1- 1033 ராஜா, Gr1-735 சங்கரமணிகண்டன் அவர்களிடம் நல்ல முறையில் வைத்திருக்க கூறிவிட்டு புறப்பட்டு காவல் நிலையத்தில் மேற்கண்ட நபர்களை உறவினர்களிடம் காவல் துணைகன்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் திருப்புவனம் அவர்களின் அனுமதி பெற்று ஒப்படைத்து கொண்டிருக்கும் போது 28.06.25 தேதி மாலை சுமார் 06.45 மணியளவில் தலைமைக் காவலர் 760 பிரபு என்பவர் என்னுடைய தொலைபேசியில் அழைத்தார். அப்போது அஜித்குமார் என்பவர் மீண்டும் தப்பி ஓடி கீழே விழுந்து விழுந்து விட்டதாகவும் அவருக்கு வலிப்பு வந்து விட்டது என்றும் திருப்புவனம் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். 

இதனால் மேற்கண்ட நபர்களை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவலைக் கூறிவிட்டு மீண்டும் பிரபு அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி மருத்துவமனையில் வந்து பார்க்க மேற்கண்ட அஜித்குமாரை சிவகங்கை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்கள். அங்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதாக Gr1- 1033 -ம் Gr1- 735 -ம் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றதாகவும் இரவு சுமார் 11.15 மணிக்கு மருத்துவர் அவர்கள் பரிசோதித்து விட்டு அஜித்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியதாக எனக்கு தெரியப்படுத்தினார்கள். நான் தகவல்கள் அனைத்தையும் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.