சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸின் 62வது பட்டமளிப்பு விழா இன்று (11.07.2025) நடைபெற்றது. இதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.  அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர்” குறித்துப் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் தன்னம்பிக்கை வலிமையைக் காட்டியது. உள்நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பாகிஸ்தானுக்குள் 9 முதல் 10 இலக்குகளை 28 நிமிடங்களுக்குள் இந்தியா வெற்றிகரமாகத் தாக்கியது.

இந்தியாவின் இராணுவம், இந்த நடவடிக்கையின் போது பிரம்மோஸ், ஒருங்கிணைந்த வான் கட்டளை நெட்வொர்க்குகள் மற்றும் போர்க்கள ரேடார்கள் போன்ற அதிநவீன அமைப்புகளைப் பயன்படுத்தியது. இவை அனைத்தும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.  பிரமோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத இலக்குகளை 23 நிமிடங்களில் தாக்கி அழித்தோம். பாகிஸ்தான் அதைச் செய்தது, இதைச் செய்தது என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் கூறின. அது தொடர்பாக ஒரு புகைப்படம் இருந்தால் காட்டுங்கள். அந்த புகைப்படத்தில் எந்த இந்தியக் கட்டமைப்பு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கிறதா? எனக் காட்டுங்கள். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தளங்கள் மீது இந்தியா துல்லியத் தாக்குதல் மேற்கொண்டது. இந்தியாவின் தாக்குதல் குறித்து சில சர்வதேச ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டன” எனப் பேசினார்.

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி (22.04.2025) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்- இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் கூடாரங்கள் குறிவைத்து இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.