Advertisment

குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள்; மலர், பழத் தோட்டங்கள் - அசத்தலான அரசு பாலிடெக்னிக்!

Air-conditioned classrooms with modern technology Government Polytechnic College

Advertisment

திருநாவுக்கரசர் அமைச்சராக இருந்த போது 1981 ஆம் ஆண்டு அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் கிராமப்புற மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக 40 ஏக்கர் பரப்பளவில் பாலிடெக்னிக் கல்லூரியும் 10 ஏக்கர் பரப்பளவில் விடுதிகள், ஆசிரியர்கள் குடியிருப்புகளும் உருவாக்கப்பட்டது. அத்தனையும் இன்றுவரை கம்பீரமாக நிற்கும் கருங்கல் கட்டடங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கான அரசு பாலிடெக்னிக் இதுவே. பல ஆயிரம் பேரை படிக்க வைத்து பல துறைகளிலும் சாதிக்க வைத்த பாலிடெக்னிக் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதனால் மாணவர்களுக்கு இடம் கிடைப்பதே அரிது. ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு பாலிடெக்னிக்கில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் களில் முன்மாதிரி அரசு பாலிடெக்னிக் அறந்தாங்கி என்பதை உருவாக்கி இருக்கிறார் தற்போதைய கல்லூரி முதல்வர் குமார்.

கடந்த 2006 ல் இருந்து சிவில் பிரிவு ஆசிரியராக இருந்த குமார் கடந்த 2023 ஜூன் முதல் நாளில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றதும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல வந்த தனது பழைய மாணவர்களிடம் நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்வதைவிட நீங்கள் படித்த வகுப்பறையை குளிரூட்டப்பட்ட திறன் வகுப்பறையாக மாற்றித்தர வேண்டும். அதுவே நீங்கள் படித்த கல்வி நிறுவனத்திற்கு செய்யும் பலனாக இருக்கும் என்று சொல்ல அந்தப் (பழைய மாணவர்கள்) இளைஞர்கள் சரி என்று சொன்னதோடு சில வாரங்களிலேயே வகுப்பறையை நவீனமாக மாற்றி அமைத்தனர். அதே போல ஒவ்வொரு பிரிவில் இருந்து தானாக முன் வந்த முன்னாள் மாணவர்கள் ஒரு வருப்பறைக்கு தலா ரூ.5 லட்சம் செலவு செய்து வகுப்பறைகளை மாற்றி அமைத்தனர்.

Advertisment

Air-conditioned classrooms with modern technology Government Polytechnic College

இதைப் பார்த்து சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஒரு ஸ்மார்ட் போர்டு வழங்கினார். அரசு கல்லூரி ஆசிரியர்கள் பங்களிப்போடு பல வகுப்பறைகள் மாற்றப்பட்டு தற்போது சில வகுப்பறைகள் தவிர மற்ற அனைத்து வகுப்பறைகளும் குளுகுளு திறன் வகுப்பறைகள், சாக்பீஸ் இல்லாத வெள்ளை போர்டுகள், பேன், தூய குடிநீர், பேட்டரிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தமிழ்நாட்டிலேயே முதன்மையான அதிநவீன அரசு பாலிடெக்னிக் என்பதை நிரூபித்துள்ளது.

மேலும் புதர் மண்டிக்கிடந்த சுற்றுப்புறத்தையும் முன்னாள் மாணவர்கள் உதவியோடு சுத்தம் செய்து கொய்யா, மா, பலா, வாழை, முந்திரி, திராட்சை என 50 க்கும் மேற்பட்ட வகையான 1000 பழமரக்கன்றுகள். மூலிகை தோட்டம், ஊட்டி ரோஜா உள்பட 50 வகையான 500 பூ செடிகளும் வளர்க்கப்படுவதுடன் சுற்றுவளாகத்தை சுற்றி நடை பாதை அமைத்து பாதை ஓரத்தில் தென்னை, பலா, மா எனப் பலவகையான நீண்ட காலம் பலன் தரும்மரங்களும் காய்கறிச்செடிகளும் வளர்க்கப்பட்டு பசுமையை நோக்கி செல்கிறது.

Air-conditioned classrooms with modern technology Government Polytechnic College

இதையெல்லாம் அறிந்த புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் அறந்தாங்கி பாலிடெக்னிக் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் நிர்வாகம் தீ தடுப்பு மற்றும் தையல் போன்ற சான்றிதழ் வகுப்புகளையும் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி கொடுத்துள்ளனர்.

இப்படி மாற என்ன காரணம் என்ற நமது கேள்விக்கு.. முதல்வர் குமார் நம்மிடம், “இவையெல்லாம் இப்படி மாறக் காரணம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை ஒரு நாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பள்ளியைப் பார்த்ததும் ஒரு சின்ன பள்ளிக்கூடத்தையே இப்படி மாற்ற முடியும் என்றால் பெரிய நிர்வாகம், நம்மால் மாற்ற முடியாதா?என்று எண்ணத் தோன்றியது. அப்பவே பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியிடம் பேசினேன். அவர் சொன்ன ஆலோசனைகள்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம். ஆலோசனையோடு நிற்காமல் தனது கல்லூரி போல ஒவ்வொரு நாளும் வந்து பார்த்து பார்த்து பணிகளைச் செய்யச் சொன்னார்.

Air-conditioned classrooms with modern technology Government Polytechnic College

இவற்றிற்கு எல்லாம் அரசு நிதியோடு எங்கள் கல்லூரியில் படித்து இன்று உயர்ந்த இடங்களிலும் உயர் பதவிகள், தொழில்களில் இருக்கும் எங்கள் முன்னாள் மாணவர்களின் முழுமையான பொருளாதார உதவியும்தான் மாற்றியது. எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் மன மகிழ்வோடு கல்லூரிக்கு வருகிறார்கள். ஏசி அறைகளில் வகுப்பு வெளியே செல்லும் போது எங்கள் தோட்டங்களில் பழங்கள் பறித்து சாப்பிடுகிறார்கள் மாணவிகளுக்காவே ரோஜா தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமல்ல கல்லூரியின் மொத்த நிர்வாகமும் மகிழ்வோடு இருக்கிறோம். இன்னும் மாற்றுவோம்” என்றார்.

students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe