Advertisment

'திமுக மாறுவேடத்தில் அதிமுகவினரின் திட்டம்?'-ஆர்.எஸ்.பாரதி சந்தேகம்

 'AIADMK's plan in DMK disguise?'-RS Bharati doubts

ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ''இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு அதிமுகவை சேர்ந்தவர். தமிழகத்தில் எந்த குற்றம் நடந்தாலும் திமுக மீது புகார் கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. திமுக ஒரு குற்றச்சாட்டை வைக்கிறது என்றால் ஆதாரத்தோடு தான் வைத்து பழக்கம். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டரை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரபு கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் சென்னை தியாகராய நகரில் கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக-ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் திருமுருகன் மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன் என மிரட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி தமிழகத்தில் தொடர்ந்து பல அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

 'AIADMK's plan in DMK disguise?'-RS Bharati doubts

கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரத்தில் நகராட்சி ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூபாய் 8 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக அதிமுக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வினோத் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் திருவாரூர் கேடிஆர் தெருவைச் சேர்ந்த 27 வது வட்ட அதிமுக செயலாளர் பாலாஜி தன் தந்தை மீதான போக்ஸோ வழக்கை திரும்பப்பெற வேண்டும் என மனைவியை துப்பாக்கி எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். இப்படி இன்னும் எத்தனையோ குற்றங்கள் இவர்களுடைய ஆட்சியில் நடந்திருக்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு எதற்கெடுத்தாலும் திமுக என்கிறார்கள். திமுக ஆட்சி இன்னும் 15 மாத காலம் இருக்கிறது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு திமுகவிற்கு இருக்கிறது. தொடர்ந்து திமுக மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றிக்கு மேல் வெற்றி அடைந்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாது 234 சட்டமன்ற தொகுதியில் 222 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள். அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு திமுகவை கொடியை பயன்படுத்துவது, திமுக என்று சொல்லி அதிமுகவினரேமாறுவேடத்தில்புகுந்து ஊடுருவி தீய செயலில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. புலன் விசாரணையைவிரைவில் முடித்து, இந்த இரண்டு கார் எந்தெந்த அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது. அவர்களுக்கு என்ன தொடர்பு? ஏன் இப்படி இரவு நேரத்தில் அங்கு வந்து போனார்கள்? இதையெல்லாம் ஒரு தனி டீம் போட்டு விசாரிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. காவல்துறை கண்காணிப்போடு இருக்க வேண்டும்என்பதை திமுகவின் அமைப்பு செயலாளர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, ''அதை காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும். நானா பறிமுதல் செய்தேன். விசாரணைக்காக செல்போனை வாங்குவார்கள். காரணம் என்னவென்றால் செல்போனில் சில தகவல்கள் கிடைக்கும். அதன் மூலம் துப்பு துலங்கும். எங்களைப் பொறுத்தவரை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தலையிட நாங்கள் தயாராக இல்லை. புலன் விசாரணை நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும். அதற்குரிய எல்லா விஷயங்களும் செய்து கொடுப்போம்'' என்றார்.

admk police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe